வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Friday 15 November 2013

எலும்பு உறுதிக்கு கறிவேப்பிலை

எலும்பு உறுதிக்கு கறிவேப்பிலை

சுடலைமுத்து தோட்டத்துக்குள் போன அம்மணி, கறிவேப்பிலையை உருவி எடுத்து கசக்கி முகர்ந்தவள், ''ஆஹா... என்ன வாசம் பார்த்தியா வாசம்பா! வா, தாட்சாயிணி அக்காகிட்டப் போய் கேட்டுக் கொஞ்சம் பறிச்சிக்கலாம்...'' என்றபடியே விறுவிறுவென நடந்தனர்.
''அக்கா... அக்கா...'' என்று அழைத்தபடியே வரும் இருவரையும் பார்த்த தாட்சாயிணி, ''என்னடி அதுக்குள்ள விஷயம் உங்க காதுக்கு எட்டிடுச்சா?'' என்றார்.
''என்னக்கா சொல்ற... உங்க தோட்டத்துல கறிவேப்பிலை கிடக்கிறதைப் பார்த்ததும் பறிச்சிக்கலாம்னு வந்தோம்.''
''ஓஹோ... அப்படியா சங்கதி, என் பேத்தி பெரிய மனுஷியான விஷயம் தெரிஞ்சுதான் வந்தீங்களோனு நெனைச்சேன். நாளைக்கு நலங்கு வெச்சிருக்கு. காலையிலயே வந்துரணும் என்னா... மதியம் விருந்து சாப்பிடலாம்...'' என்ற தாட்சாயிணி வீட்டின் கொல்லைப்புறத்தை ஒட்டி இருந்த அறைக்கு அழைத்துப் போக, அங்கு அழகுப் பதுமையாக இருந்தாள் பேத்தி பார்வதி.

''கண்ணுக்கு அழகா... கறிவேப்பிலைக் கொத்து மாதிரி ஒரே ஒரு பேத்தி உனக்கு. யாருக்குக் கொடுத்துவெச்சிருக்கோ.'' எனச் சிரித்தாள் வாசம்பா.
''அந்தந்த வயசுக்கான அழகு அத்தனையும் இருக்கு... ஆனா, பார்வதி குட்டிக்கு தலையில் முடியக் காணோமே...?'' என்று அம்மணி நீட்டி முழக்க,
''அதான், இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எப்போ பார்த்தாலும் படிப்பு, பரீட்சை, டென்ஷன்... அதனால, வளர்ற முடியும் உதிர்ந்திடுது. இத்தனைக்கும் வாரம் தவறாம, எண்ணெய் தேய்ச்சுத்தான் குளிக்கிறா. சத்தான சாப்பாடுதான் சாப்பிடுறா. ஆனா, பார்வதிக்கு முடி கொட்டுறது மட்டும் நிக்க மாட்டேங்குது. என்ன அம்மணி செய்ய?'' என்றார் தாட்சாயிணி.
''கையில வெண்ணெயை வெச்சிகிட்டு நெய்க்கு அலையலாமாக்கா? கறிவேப்பிலைக் காட்டையே வீட்ல வெச்சிக்கிட்டு, இப்படி முடி உதிர விடலாமா?'' என்ற அம்மணி, ''கருகரு முடி வளரணும்னா, கறிவேப்பிலை தைலம் செஞ்சு வெச்சுக்கணும். கறிவேப்பிலை இலைகளை உதிர்த்து அரைச்சு வடை மாதிரி தட்டி, நல்லாக் காயவெச்சுக்கணும். தேங்கா எண்ணெய், இல்லேன்னா தெனமும் தலையில தடவிக்கிற எண்ணெயில் அதைப் போட்டு நல்லா ஊறவிடணும். கறிவேப்பிலை சாறு அப்படியே அதில் எண்ணெயில் இறங்கிடும். தொடர்ந்து இந்த எண்ணெயைத் தேய்ச்சிட்டு வந்தா, முடி உதிர்றது நின்னுடும். பித்தம் தணிச்சு, உடல் சூட்டையும் குறைச்சிடும். சமையல் வாசனைக்கு மட்டுமில்லாம, முடி வளர்ச்சிக்கும் பயன்படுங்கிற இதோட அருமை தெரியாம, சாப்பிடறப்ப கறிவேப்பிலையை எடுத்து ஓரத்துல வெச்சிடுறாங்களே...'' என்றாள் அம்மணி.
''கைவேலையில கலக்குறீங்களேக்கா, கூடவே கறிவேப்பிலை இலையிலும் தொழில் செய்யலாமே... என்ன அம்மணி நான் சொல்றது...?'' என்றாள் வாசம்பா.
''ஆமாமா, கறிவேப்பிலை தண்டைக்கூட தூக்கி எறியாம நல்லாக் காயவெச்சுப் பொடிச்சு வெச்சிக்கலாம். குழம்பு, ரசம் செய்றப்ப, இந்தப் பொடியைத் தூவிவிட்டு இறக்கினா, ரசம் வாசம் காத தூரம் வீசும். கறிவேப்பிலையோட உளுந்து, மிளகா வத்தல், உப்பு சேர்த்து எண்ணெயில் போட்டு நல்லா வறுத்துப் புளி சேர்த்து அரைச்சுக்கணும். இந்தப் பொடியில, கொஞ்சமாத் தண்ணிவிட்டு கலந்தா... துவையல், அதிகமாத் தண்ணிவிட்டா... அது சட்னி. இது ரத்தத்துல கொழுப்பைக் குறைக்கிறதால, உடல் எடை ஒரே சீரா இருக்கும். நல்ல ஜீரணசக்தியையும் கொடுக்கும்.'' என்றாள் அம்மணி.
''ம்.. அப்புறம்..?''
''கறிவேப்பிலை, வயசான காலத்துல வர்ற எலும்பு தேய்மானத்தைக்கூட வரவிடாம செஞ்சிடும். அந்தக் காலத்துல சமைக்கிற எல்லாத்துலயும் கறிவேப்பிலையை சேத்திருப்பாங்க. அதான் இன்னிக்கும் நாம எலும்பு, மூட்டு பிரச்னை இல்லாம இருக்கோம்னு நெனைக்கிறேன்.'' என வாசம்பா சிரிக்க,
''ஆமாண்டி. கண்ணாடி போடாம, எனக்கு கண் பார்வை தெளிவா இருக்கிறதுக்கு கறிவேப்பிலையும் ஒரு காரணம்.
சர்க்கரை நோயாளிங்க, தெனமும் ரெண்டு வேளை 10 கறிவேப்பிலை இலையை மென்னுட்டு வந்தா, மாத்திரை சாப்பிடுற அளவுகூட பாதியாக் குறைஞ்சிடும். சளி, வாய்க் கசப்பு, குமட்டல், மலச்சிக்கல்னு எந்தப் பிரச்னையும் இருக்காது. '' என்ச் சிரித்தாள் அம்மணி.
''இத்தனை விஷயம் இருக்கே... நாளை விசேஷத்துக்கு கறிவேப்பிலை விருந்துதான்'' என்ற தாட்சாயிணியிடம் விடை பெற்றாள்.

No comments:

Post a Comment