மணத்தக்காளி கீரையின் மகிமை:-
கீரை வகைகளில் மணத்தக்காளி கீரையும் ஒன்று. இந்த கீரையில் இலை, காய், பழம்
இருக்கும். இந்த மூன்றையும் சமைத்து சாப்பிடலாம். இதில் சிறிய அளவில்
வெள்ளை பூக்களும் மலரும். மணத்தக்காளி கீரையின் காய்கள் மிக சிறியதாக
கொத்து கொத்தாக காய்க்கும். காய் முற்றினால் கத்தரிகாய் நிறத்தில்
இருக்கும். இதில் மற்றொரு வகை உள்ளது. அதில் பழம் இளம் சிவப்பாக இருக்கும்.மணத்தக்காளி கீரையின் பழம் இனிப்பு புளிப்பு கலந்த சுவையாக இருக்கும். காய், பழத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். சட்டினி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம் வைத்தும் சாப்பிடலாம். காய் மற்றும் பழத்தை புளிக்குழம்பு வைத்து சாப்பிடலாம்.
பலன்கள்:
1. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மூலம் ஆகிய நோய்கள் குணமாகும். சளி, இருமல், போன்ற கப நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. பிள்ளை பெற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது.
2. கண் பார்வை நன்றாக தெரியும்.
3. விட்டமின் ஏ, பி மற்றும் இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் மணத்தக்காளி கீரையில் அதிகம்.
4. குறைந்த விலையில் கிடைத்தாலும், மணத்தக்காளி கீரையில் போஷாக்கு அதிகம்.
5. குழந்தைகள், கர்ப்பிணிபெண்கள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. மணத்தக்காளி கீரைக் குழம்பு
மணத்தக்காளி கீரைக் குழம்பு
என்னென்ன தேவை?
மணத்தக்காளி கீரை- ஒரு கட்டு
துவரம் பருப்பு-100கிராம்
சிறிய வெங்காயம்-50 கிராம்
தக்காளி -3
பச்சை மிளகாய்- 6
பூண்டு-3சிறிய பல்
புளி- சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி-1ஸ்பூன்
எண்ணெய்-3டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்து-1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்- கால் டீஸ்பூன்
சீரகம்-1/2 டீஸ்பூன்
வரமிளகாய்- 1
கறிவேப்பிலை,உப்பு-தேவையான அளவு
எப்படி செய்வது?
முதலில் கீரையை ஆய்ந்து கழுவிக் கொள்ளவும். புளியை நூறு மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள் பொடி சேர்த்து துவரம் பருப்பை நன்றாக வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் அதனுடன் பெருங்காயம், பூண்டு, கீரை, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கூடவே தக்காளியைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் கரைந்துள்ள புளிக்கரைசலை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கொதிக்கும் புளிக்கரைசலுடன் கடைந்து வைத்துள்ள கீரையைக் கலந்து மேலும் பத்து நிமிடம் கொதிக்க விடவேண்டும். பின் கீரைக் குழம்பை இறக்கி வைத்து, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், கிள்ளிப்போட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், போட்டு தாளித்தால் ருசியான மணத்தக்காளி கீரை குழம்பு ரெடி..
No comments:
Post a Comment