இனிப்பு’ படத்தின் பயணத்தில் ஐயா நம்மாழ்வார்! ம.செந்தமிழன்
மரபுவழி மருத்துவ முறைகளால் நோய்களைத் தீர்க்க முடியும் என்பதை ஊருக்கு
உரைக்கும் நமது பயணத்தில், எண்ணற்றோர் இணைந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு
நன்றி. இயற்கை வேளாண் மெய்யறிவாளர் நம்மாழ்வார் அவர்களும் இப்பயணத்திற்கு
தமது ஆதரவை நல்கியுள்ளார். குறிப்பாக, ‘இனிப்பு’ ஆவணப்படத்தில் அவர் மிக முக்கியமான பங்கேற்பு ஒன்றினைச் செய்ய உள்ளார். அது என்ன என்பது படம் முடியும் வரைக்கும் கமுக்கமாகவே இருக்கட்டும்.
கடந்த 2001 ஆம் ஆண்டு நான் குமுதம் இதழில் பணியாற்றியபோது, ’பிராய்லர் சிக்கன்’ கறியை உண்பதனால் விளையும் தீங்குகளைப் பற்றி எழுதினேன். ‘சிக்கன் எமன்’ எனும் தலைப்பில் அக்கட்டுரை குமுதம் இதழின் அட்டைப்படக் கட்டுரையாக வெளியானது. இக்கட்டுரைக்கு எதிராக, கோழிப் பண்ணை உரிமையாளர்கள், அலோபதி கால்நடை மற்றும் மனித மருத்துவர்கள் பொங்கி எழுந்தனர். கோழிப்பண்ணை அமைப்பினர், அலோபதி மருத்துவர்களின் புகைப்படங்களுடன் ‘சிக்கன் உண்ண உகந்தது. இதில் புரதம் உள்ளது’ என்று பக்கம் பக்கமாக விளம்பரம் செய்தனர். சன் தொலைக்காட்சி இதுகுறித்து ‘சிறப்பு நிகழ்ச்சி’ ஒளிபரப்பியது.
என்னுடைய வீட்டு தொலைபேசி எண்ணை எப்படியோ கண்டறிந்த எதிர்ப்பாளர்கள் கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் இருந்தனர். சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சம் எங்கள் குழுவினருக்கு இருந்தது. ஒரே வாரத்தில் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் கோழிப் பண்ணைகளுக்கு இழப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
எனது கட்டுரையை ஆதரித்துப் பேசும் வல்லுனர்களை உடனடியாகத் தேடி அவர்களது உதவியைப் பெற்றாக வேண்டிய நிலையில் நாங்கள் இருந்தோம். இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு காட்டிய திரு.சைதை துரைசாமி (தற்போதைய மேதகு சென்னை மேயர்), இயற்கை வேளாண் மெய்யறிவாளர் நம்மாழ்வார் ஆகிய இருவரும் அந்தக் கட்டுரைக்குத் துணை நிற்கச் சம்மதித்தனர். இவர்கள் இருவரும் தங்கள் கட்டுரைகளை விரிவாக எழுதிக் கொடுத்தனர்.
’சிக்கன் எமன்’ கட்டுரையின் எதிர்வினை மட்டுமே நான்கு பக்கங்களில் வெளியானது. இதனால், சட்டப்படி எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவியலாத நிலை எதிரிகளுக்கு ஏற்பட்டது.
பிராய்லர் சிக்கன் உண்பது தீங்கானது எனும் உண்மை இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், அதை முதன் முதலில் ஒரு பெரும் ஊடகம் கூறியபோது, ‘அறிவியலுக்கு எதிரானது, பிற்போக்குத்தனமானது’ என்றெல்லாம் அதை எதிர்த்தவர்கள்தான் அலோபதிக்காரர்கள். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பதில் கூட நியாயம் இருகிறது. அவர்களது தொழிலுக்கு ஆபத்து எனும் எண்ணத்தில் அவர்கள் எதிர்த்தார்கள்.
ஆனால், மக்கள் உடல்நலத்தைக் காக்க வேண்டிய அலோபதிக்காரர்கள் பிராய்லர் சிக்கன் விளம்பரங்களில் தங்கள் முகங்களைக் காட்டி பரப்புரை செய்தனர்.
இப்போது நிலைமை மாறிவிட்டது. மக்களுக்கு பிராய்லர் மீது எச்சரிக்கை மனநிலை வந்துள்ளது. நாட்டுக் கோழி வளர்ப்பு பெருகத் துவங்கிவிட்டது. தமிழக கால்நடைத்துறை நாட்டுக் கோழி வளர்ப்பிற்கு கணிசமான மானியத் தொகையை வழங்கி வருகிறது.
சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோய்க்கும் அலோபதி தீர்வாகாது என்று மக்கள் புரிந்துகொள்ளும் நிலையும் வ்ரைவில் உருவாக வேண்டும் என்பதே நம் விருப்பம். அந்த விருப்பத்தின் பயணத்தில் நம்மாழ்வார் அவர்கள் நெடுங்காலமாக இருக்கிறார்.
உண்மையில் அவரது பயணத்தில் நான் இணைந்துள்ளேன்; நாம் இணைந்துள்ளோம்.
நம்மாழ்வார் ஐயாவுக்கும் அவரது அடியொற்றி வாழ்வியலை வகுத்துக்கொண்டுள்ள இயற்கைச் சமூகத்தினருக்கும் நன்றி!
No comments:
Post a Comment