கீரை இல்லா சமையல் வேண்டாமே!
“காய்கறிகள் வாங்கச் செல்லும் நம்மை முதலில் கவர்ந்து இழுப்பது
பச்சைப்பசேல் கீரைகள்தான். கீரை வளர்ப்பது மிக எளிது. மிகக்குறுகிய
காலத்தில் அறுவடை செய்து விற்பனை செய்துவிடலாம். இதில் ஓர் அதிர்ச்சிச்
செய்தியும் உண்டு. தமிழகத்தின் பல புறநகர் பகுதிகளில், கழிவுநீரில்
சுகாதாரமே இல்லாமல் கீரை வளர்த்து, விற்பனை செய்து காசு பார்க்கிறார்கள். இதனால், நன்மை செய்ய வேண்டிய கீரையே பல நேரங்களில் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற பாதகங்களை ஏற்படுத்தி விடுகின்றன. இப்பிரச்னையைத் தவிர்க்கும் வகையில், கீரைகளை நம் வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். தானியக்கீரை போன்றவற்றை பெரிய பைகள் அல்லது தொட்டிகளிலும், அரைக்கீரை போன்றவற்றை கீரை படுகைகளிலும், பாலக் கீரையை உயரமான பைகளிலும் வளர்க்கலாம்.
கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சிறிய பைகளில் வளர்க்கலாம். கீரை விதைகளை நர்சரியில் வாங்கி விதைக்கலாம். அதிகபட்சம் 15 தினங்களில் கூட அறுவடை செய்யும் கீரை வகைகள் உள்ளன. உயிர்ச் சத்தான வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவு பச்சைக்கீரை வகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், இவை தொற்றுநோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. அதனால் கீரை ‘பாதுகாக்கும் உணவு’ (Protective Food) என்றழைக்கப்படுகிறது.
கீரை மகத்துவம்
அரைக்கீரை: தாது விருத்தி செய்யும். ரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத நோய் தணிக்கும்.
அகத்திக்கீரை: பித்தம் குணமாகும். ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். மலத்தை இளக்கி வெளியேற்றும். வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண் பார்வை தெளிவையும், எலும்பு பலமும் கொடுக்கும்.
தவசு முருங்கை: மூக்கு நீர்பாய்தல், இரைப்பு, இருமல் நீங்கும். கோழை அகற்றும் குணமுடையது.
லஜ்ஜை கெட்ட கீரை: சித்தர்கள் இக்கீரையை ‘வாத மடக்கி‘ என்று கூறுகிறார்கள். மூட்டுவலியும் மூட்டுவீக்கமும் நீங்கும். வாயுத் தொந்தரவுகள் குறையும்.
ஆரைக்கீரை: அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும். பித்தக் கோளாறுகளையும் போக்கும்.
பொன்னாங்கண்ணி கீரை (பச்சை): மேனி பிரகாசிக்கும். தினசரி இக்கீரையை சூப் வைத்து அருந்தினால் உடல் வலு பெறும்.
மணத்தக்காளி கீரை: குடல்புண், வாய்ப்புண் ஆற்றும் சக்தி உள்ளது. சிறிய வெங்காயத்துடன் சமைத்து சாப்பிட்டால் புண்கள் விரைவில் ஆறும்.
முளைக்கீரை: அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுடி நரைக்காமல் இருக்கும்.
கறிவேப்பிலை: நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் இளமைத்தோற்றம் நிலைத்து நிற்கும்.
பொன்னாங்கண்ணி கீரை(சிவப்பு): பூண்டு சேர்த்து வதக்கி உணவுடன் உண்டால் மூலநோய், வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.
புதினா: இரும்புச்சத்து இருப்பதால் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, புதிய ரத்தத்தையும் உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும். எலும்புகளை வளரச் செய்யும். புதினாவை நசுக்கிப் போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். 1/2 சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும்.
No comments:
Post a Comment