வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை:-
கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக
வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின்
பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை
கொண்டுள்ளது.. நீர்சத்து அதிகமுள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை
குணப்படுத்தும் தன்மை கொண்டது. உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக்கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள். முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கணிமங்களை கொண்டுள்ளது முளைக்கீரை. கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண்டுள்ள புரதத்தை விட 30% அதிகபுரதத்தை கொண்டுள்ளது. இதயநோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது.
முளைக்கீரை மிளகூட்டல்
என்னென்ன தேவை
முளைக்கீரை-1கட்டு
துவரம் பருப்பு-100 கிராம்
துருவிய தேங்காய்-1மூடி
சீரகம்-1ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-3
உளுந்தம் பருப்பு-1ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்-1ஸ்பூன்
கடுகு- 1/2ஸ்பூன்
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
உப்பு-தேவையான அளவு
எப்படி செய்வது
முதலில் துவரம் பருப்பை மஞ்சள்தூள் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கீரையின் மண் நிரம்பிய வேர் பகுதியை நறுக்கிப் போட்டு விட்டு மீதமிருக்கும் கீரையை தண்ணீரில் சுத்தமாக அலசி பொடிபொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கிய கீரையை தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயுடன் சீரகம், மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கி பின் மை போல மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும். தீயை மிதமாக வைத்துக்கொள்ளவும். பின்னர் கீரையையும் துவரம் பருப்பையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு கிளறவும். அரைத்த விழுதையும் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகச் சேரும்படி கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். சுவையான முளைக்கீரை மிளகூட்டல் தயார்.
No comments:
Post a Comment