துன்புறுத்தல் தடுப்புச் சட்ட முன்வரைவு – ஓர் அரைகுறையான முயற்சி
துன்புறுத்தல் (சித்திரவதைப்படுத்துதல்),
கொடுமைப்படுத்துதல், மனிதர்களை இழிவாக நடத்துதல் ஆகியவற்றிற்கு எதிராகப்
பன்னாட்டு அவை (UNO) கொண்டுவந்த சட்டத்தில் இந்தியா 1997ஆம் ஆண்டு
அக்டோபர் 14ஆம் நாள் கையெழுத்திட்டது. கையெழுத்திட்ட இந்திய அரசு,
அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும்;
ஆனால் அதைச் செய்யவில்லை. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக இப்போது
(ஏறத்தாழ பதின்மூன்று ஆண்டுகள் கழித்து) ‘துன்புறுத்தல் தடுப்புச் சட்ட
முன்வரைவு 2010’ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. இம்முன்வரைவாவது
உருப்படியாக இருக்கும் என நினைத்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பல்லாண்டுகளாக இந்தியாவில் இருந்துவரும் துன்புறுத்தல் கொடுமையை ஒழிக்க
புதுதில்லியில் உள்ள நடுவண் அரசு அக்கறை காட்டவில்லை என்பதையே
துன்புறுத்தல் தடுப்புச் சட்ட முன்வரைவின் வரிகள் விளக்குகின்றன. சட்ட
முன்வரைவின் இப்போதைய வடிவத்தைப் பார்த்தால், சட்ட அலுவலர்களால்
துன்புறுத்தலுக்கும் கொடுமைக்கும் மனிதத்தன்மையற்ற செயல்களுக்கும்
ஆளாவோர்க்கு இச்சட்டத்தால் நீதி எல்லாம் ஒன்றும் பெரிதாகக் கிடைத்து
விடாது என்றே தோன்றுகிறது.
விசாரணை, குற்றவழக்கு, தண்டனை
துன்புறுத்தல்
குற்றத்திற்கு ஆளாகும் அரசு ஊழியர் ஒருவரை விசாரிக்க அரசின் ஒப்புதலை
முன்கூட்டியே பெற வேண்டும் என்னும் முன்வரைவின் விதி, ‘நேர்மையான,
சார்பற்ற, உரிய முறையில் விசாரணை, குற்றவழக்கு, தண்டனை ஆகியன கொணர்தல்’
என்னும் பன்னாட்டு அவையின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது.
துன்புறுத்தலையும் இழிவாக
நடத்துதலையும் ஒழிப்பதைத் தடுக்கும் சட்டக்காரணிகளையும் பிற
வகைக்காரணிகளையும் புறந்தள்ள வேண்டும் எனப் பன்னாட்டு அவையின் சட்டம்
தெளிவாகக் கூற, இந்திய அரசின் முன்வரைவோ ‘குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு
ஊழியர் ஒருவர் மீது நடுவண் அரசிடமோ மாநில அரசிடமோ அவர் சார்ந்துள்ள அரசு
சார் நிறுவனத்திடமோ முன் ஒப்புதல் பெறாமல் தீர்ப்பு வழங்க எந்த
நீதிமன்றத்திற்கும் உரிமை இல்லை’ என்று எதிர்க்குரலில் ஒலிக்கிறது.
அரசிடம் முன் ஒப்புதல் பெற்றுத்தான் வழக்குத் தொடர முடியும் என்னும் நிலை,
இம்முன்வரைவின் வலிமை, நடுநிலைத்தன்மை, துல்லியத்தன்மை ஆகியவற்றைத் தூள்
தூளாக்கிவிடுகிறது. இதனால் அரசு யார் மீது வழக்குத் தொடர ஒப்புதல் தரலாம்
என நினைக்கிறதோ அவர் மீது மட்டுமே வழக்குத் தொடரமுடியும்; முன்ஒப்புதலைக்
கூட அரசு நினைத்தால் நீண்ட காலம் கழித்துத் தரலாம். இப்படி வழக்குத்
தொடர்வதை இழுத்து அடித்து விட முடியும்.
இது மட்டுமின்றித்
துன்புறுத்தலுக்கு ஆளாகி ஆறு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட ஆள்
குற்றத்தைப் பதிய வேண்டும் என்னும் முன்வரைவின் ஐந்தாவது பிரிவு
விசாரணையையும் வழக்கையும் இன்னும் சீர்குலைத்து விடும். ஏனெனில்
துன்புறுத்தலுக்கு ஆளாகிப் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலோனோர் நீண்ட காலம்
விசாரணைக்கைதிகளாகச் சிறையில் இருப்பவர்கள் தாம்! ஆக, துன்புறுத்தப்பட்ட
ஆறு மாதங்களுக்குள் குற்றப்பதிவு என்பது முயற்கொம்புதான்!
பாதிக்கப்பட்டோருக்கு நேர்ந்த உடல் உளைச்சலும் மன உளைச்சலும் மீண்டும்
துன்புறுத்தப்படுவோமோ என்னும் அச்சமுமே அவர்களைக் குற்றங்களைப் பதிவு
செய்ய இயலாத சூழலில் தள்ளிவிடும். இதைப் பற்றி எல்லாம் அரசின் சட்ட
முன்வரைவு துளியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இப்படிப்பட்ட
சட்டத்தடுப்புகள் எல்லாம் குற்றவாளிகளுக்குத் தான் பாதுகாப்பாக அமையும்
என்பதையே குற்ற நடைமுறைச்சட்டம் (CrPC) , ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரங்கள்
சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் நடத்துவதை ஆதரிக்காத நடுவண் அரசு,
மாநில அரசு ஆகியவற்றின் போக்குகள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.
இழப்பீடு:
பன்னாட்டு அவைச் சட்டத்தின்
பதினான்காவது கூறு ‘முழுமையான மீட்சிக்குத் தேவையான இழப்பீட்டைப் பெறப்
பாதிக்கப்பட்டவருக்கு முழு உரிமை உண்டு’ எனக் கூற, அரசின் முன்வரைவோ
இவ்விடயத்தைப் பற்றிப் பேசவே இல்லை.
ப. அ. சட்டத்தைச்
செயல்படுத்தும் நாடுகளைக் கண்காணிக்கும் ‘துன்புறுத்தலுக்கு எதிரான குழு’,
‘நாடுகள் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி, உளவியல் உதவி, சமூக
மீள்வாழ்வு ஆகியன வழங்குவதுடன் போதுமான இழப்பீட்டுத் தொகையையும் வழங்க
வேண்டும்’ என்கிறது. ப. அவையின் மீட்புரிமைக்கான சிறப்பு அலுவலர்,
அ) உடல் உளைச்சல், மன உளைச்சல்
ஆ) வலி, துன்புறுதல், இன்னல்கள்
இ) கல்வி முதலியவற்றில் இழந்த வாய்ப்புகள்
ஈ) பொருள் ஈட்டலில் ஏற்பட்ட இழப்புகள்
உ) மீட்டுருவாக்கத்திற்குத் தேவையான மருத்துவச் செலவுகள், பிறவகைச்செலவுகள்
ஊ) சொத்து , வணிகம் ஆகியவற்றில் நேர்ந்த இழப்புகள்
எ) புகழுக்கு ஏற்பட்ட களங்கம்
ஏ) தீர்வுக்குத் தேவைப்படும் சட்ட உதவிகள் – அவற்றிற்கான செலவுகள்
ஆகிய அனைத்து வகை இழப்புகளுக்கும் தீர்வுகள், மீட்புதவிகள், இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று விவரிக்கிறார்.
இந்திய அரசமைப்புச் சட்டம்
துன்புறுத்தலுக்கு ஆளானவருக்கான இழப்பீட்டை முடிவெடுக்கும் உரிமையை உச்ச
நீதிமன்றத்திற்கும் மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் கொடுத்திருக்கிறது.
ஆனால் அடிப்படை உரிமைகள் தொடர்பான பல வழக்குகளில் இழப்பீடுகள் வழங்குவதில்
உச்ச நீதிமன்றம் உயர் அளவுகளைக் கையாண்டு சுணக்கம் காட்டியே
வந்திருக்கிறது. இன்னும் பல வழக்குகளில் இழப்பீடுகள் எவ்வகை அளவுகளும்
இன்றி உச்சநீதிமன்றத்தின் தன்விருப்பப்படியே அமைந்திருக்கின்றன.
இந்நிலையில் இந்திய அரசின் முன்வரைவோ துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்
எவ்வகைகளில் இழப்பீட்டைப் பெறலாம் என்பது பற்றி வாயே திறக்கவில்லை. இது
போதாதென்று, குடிமுறை (சிவில்) உரிமைகள், அரசியல் உரிமைகள் ஆகியவற்றிற்கான
பன்னாட்டு ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும்போது இந்திய அரசு வெளியிட்ட
அறிவிப்பில், ‘சட்டத்திற்கு எதிரான முறையில் சிறையடைப்புக்கு உள்ளாகிப்
பாதிக்கப்படுவோர்க்கு இந்தியச் சட்ட அமைப்பின் கீழ் இழப்பீடு பெறும்
கட்டாய உரிமை கிடையாது’ எனக் கூறப்பட்டுள்ளது.
வரையறையில் உள்ள குறைபாடு:
ப. அ. சட்டத்தை
ஒப்பிடுகையில் அரசின் சட்டமுன்வரைவு ‘துன்புறுத்தல்’ என்பதை வரையறுப்பதில்
குறையுடையதாகவே காட்சியளிக்கிறது.
ப. அ. சட்டம் கூறும் வரையறை
1. ஏதேனும் தகவல்
பெறும்பொருட்டோ குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்யும் பொருட்டோ மனத்தாலும்
உடலாலும் வலி, துன்பம் ஆகியன ஏற்படுத்துதல்
2. குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்ததற்காகவோ செய்ததாக ஐயம் ஏற்படும்போதோ தண்டித்தல்
3. (இனம், மதம், மொழி என
எவ்வகையிலும்) பாகுபாடு காட்டிக் குற்றவாளி என ஐயுறப்படும் ஒருவர் மீது
அரசு ஊழியரோ அரசுப்பொறுப்பில் இருப்பவரோ மனத்தாலும் உடலாலும் கடுமையான
வலி, துன்பம் ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் செய்யும் அச்சுறுத்தல்கள்.
அரசின் சட்ட முன்வரைவு கூறும் வரையறை
ஒருவரிடமிருந்து தகவல் பெறுதல், குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்தல் ஆகியவற்றிற்காக
-
கடுங்காயத்தை ஏற்படுத்துதல்
-
வாழ்க்கை, உடல் உறுப்புகள் மன நலம், உடல் நலம் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்துதல்
ஆகிய இரு செயல்களையும் அரசு ஊழியரும் அவருக்கு உடந்தையாக இருப்போரும் செய்தல்.
தகவல் பெறுதல், தண்டித்தல், அச்சுறுத்தல்
என மூன்று முதன்மைக்காரணங்களைப் ப. அ. சட்டம் கூற, அரசின் முன்வரைவோ முதல்
காரணத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. ‘துன்புறுத்தல்’ என்பது வலி, துன்பம்
ஆகியன ஏற்படுத்துதல் எனப் பன்னாட்டு அவை கூற, முன்வரைவோ ‘இழப்பை
ஏற்படுத்துதல்’ எனக் கூறித் துன்புறுத்தலை வரையறுக்கும் அளவையும்
உயர்த்தியே வைத்திருக்கிறது.
சட்டமுன்வரைவு கூறும் ‘கடுங்காயம்’ என்பதை இந்தியத் தண்டனைச் சட்டம்,
-
வலுவிழக்கச் செய்தல்
-
பார்வையிழக்கச் செய்தல்
-
செவித்திறன் இழக்கச் செய்தல்
-
உடல் உறுப்புகளிலும் அவற்றின் இணைப்புகளிலும் பாதிப்பு ஏற்படுத்துதல்
-
உடல் உறுப்புகளை முற்றாக அழித்தல்
-
தலை, முகம் ஆகியவற்றில் உருவ மாற்றத்தை ஏற்படுத்துதல்
-
பல், எலும்பு ஆகியவற்றை உடைத்தல்
-
உயிருக்கு உலை வைத்தல், இருபது நாட்களுக்கும் மேலாக வலி இருக்கும் வகையில் துன்புறுத்துதல், அன்றாடக் கடன்களைச் செய்ய முடியாமல் முடக்குதல் ஆகியன
என வரையறுக்கிறது.
இக்கூறுகள் அனைத்துமே உடல் சார்
தீங்குகள் குறித்தவை. சரியான தூக்கமில்லாமல் செய்வது, பாலியல் கொடுமைகள்,
பட்டினி போடுவது, உணர்வு(தொடு உணர்வு முதலியன) இழப்பு, பகடி பேசுதல் ஆகிய
பல குற்றங்கள் நீண்ட காலப் பாதிப்பையோ உடல்நலத்திற்குத் தீங்கையோ
ஏற்படுத்தாதவை தாம்! ப. அ. சட்டம் இவையனைத்தையும் துன்புறுத்தலின் கீழ்
வைத்திருக்கிறது. இவை எவற்றையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாத அரசின் சட்ட
முன் வரைவு, சட்டத்தைச் செயல்படுத்தும் அலுவலர்கள் பாதிக்கப்பட்டவர்
உடலில் புறக்குறிகள் தோன்றாத வகையில் வலிகளை ஏற்படுத்தித் துன்புறுத்தலாம்
என்பதை மறைமுகமாக ஆதரிப்பதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.
இதைத் தாண்டிச் சட்ட முன்வரைவின் நான்காவது பிரிவு துன்புறுத்தலின் வரையறையில் மேலும் ஒரு கட்டுப்பாட்டைச் சேர்க்கிறது.
நான்காவது பிரிவு:
அ) தவறான நடத்தைக்கோ குற்றத்திற்கோ அடிகோலும் தகவல்களை ஒருவரிடமிருந்து பெறுவதற்காகத் துன்புறுத்தல்
ஆ) மதம், இனம், பிறந்த இடம், இல்லம், மொழி, சாதி, சமூகம் ஆகிய பாகுபாடுகளில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் துன்புறுத்தல்
ஆகிய இரண்டிலும் அரசு ஊழியரும் அவருக்கு உடந்தையாக இருந்தோரும் குற்றம் சாட்டப்பட்டிருக்க வேண்டும்.
பாகுபாடுகளின் அடிப்படையில்
துன்புறுத்துவது துன்புறுத்தலில் ஒரு வகை மட்டுமே எனப் ப. அ. சட்டம்
குறிப்பிடுகிறது; அரசின் முன்வரைவோ பாகுபாடு என்பது துன்புறுத்தலை
வரையறுக்கத் தேவையான ஒன்று என்கிறது. ஆக, இம்முன்வரைவின்படித் தகவல்களைப்
பெறுவதற்காக மட்டும் கடுங்காயத்தை ஏற்படுத்தித் துன்புறுத்துவது என்பது
தண்டனைக்குரியதில்லை. அதே போலத் தாழ்த்தப்பட்டவர்கள், இசுலாமியர்கள்
ஆகியோரை அச்சுறுத்தித் துன்புறுத்துவது மட்டும் தனியாகத் தண்டனைக்குரியது
ஆகாது. இவை இரண்டையும் ஒரு சேரச் செய்வது மட்டுமே தண்டனைக்குரியது . இதை
எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
ஒரு குறிப்பிட்ட குழுவைச்
சேர்ந்தவர் என்னும் ஒரே காரணத்திற்காகக் கூட ஒருவர் துன்புறுத்தப்படலாம்;
சிறை வைக்கப்படலாம். ஒரு செய்தியைப் பெறுவதற்கோ குற்றத்தை ஒப்புக்கொள்ளச்
செய்வதற்கோ மட்டும் சாதி, இனம், மதம் ஆகியன கருதாது வேறொருவர்
துன்புறுத்தப்படலாம்.
இவைதவிர, துன்புறுத்தலில்
உடந்தையாக இருப்பது, சட்ட எதிர்ச் செயலில் ஈடுபடுவது, மனிதத்தன்மையற்ற
வகையில் செயல்படுவது ஆகிய ப. அ. சட்டம் குறிப்பிடும் துன்புறுத்தல்
குறித்துச் சட்ட முன்வரைவு எதுவும் கூறவில்லை. உடந்தையாக இருப்பதை
முன்வரைவு கூறினாலும் அது ‘அரசு ஊழியருக்கு’ உடந்தையாகச் செயல்பட்டுத்
துன்புறுத்துவதைக் குறிப்பிடுகிறதே தவிரப் பொதுநிலையில் இல்லை.
தடுமாற்றம்:
‘போர்ச்சூழல், அச்சுறுத்தல், போர், உள்நாட்டு அரசியல் நிலையற்ற தன்மை
போன்ற எக்காரணத்தையும் கொண்டு துன்புறுத்தலைச் செல்லத்தக்கதாக்கக் கூடாது.
…. உயர் அலுவலரிடம் இருந்தோ மக்கள் அமைப்புகளிடம் இருந்தோ பெறப்பட்ட
ஆணையையும் காரணமாகக் காட்டக்கூடாது.’ எனப் பன்னாட்டு அவைச் சட்டத்தின்
இரண்டாவது கூறு சொல்ல, அரசின் முன்வரைவின் மூன்றாவது பிரிவு இக்கருத்தில்
இருந்து விலகிச் செல்கிறது.
துன்புறுத்தல் என்பது
கொடுமைப்படுத்தல், மனிதத்தன்மையற்றுச் செயல்படுதல், இழிவாக நடத்துதல் எனக்
கூறிப் ப. அ. சட்டத்தை ஒட்டித் துன்புறுத்தலுக்கு எதிரான குழுவின் கருத்து
அமைந்திருக்கிறது. முன்வரைவோ, இதற்கு நேர்மாறாகச் ‘சட்டம்
ஒப்புக்கொண்டுள்ள செயல்களால் ஏற்படும் துன்புறுத்தலைத் துன்புறுத்தல் எனக்
கூற மறுக்கிறது. இப்படிப்பட்ட குழப்பங்கள், துன்புறுத்தலைச் சட்டப்படிச்
செல்லத்தக்கதாகத் தேவையான சட்டங்களைக் கொண்டு வர அரசுக்கு வழிவகுத்துக்
கொடுக்கும்; துன்புறுத்தலில் ஈடுபடுவோரும் ‘தீவிரவாத’ வழக்குகளில்
விசாரணைக்காகத் துன்புறுத்தியதாகக் கூறித் தப்ப ஏதுவாகும்.
‘சட்டப்படியான
நடவடிக்கைகளினால் ஏற்படும் வலி, துன்பம் ஆகியன மட்டுமே துன்புறுத்தல் எனக்
கூறப்பட மாட்டாது’ எனப் ப. அவையின் சட்டம் கூற, அரசின் முன்வரைவோ
‘துன்புறுத்தலே சட்ட ஒப்புதல் பெற்ற ஒன்றாகலாம்’ என்கிறது.
விடுபட்ட வகைமுறைகள்:
இதுவரை நாம் பார்த்த குறைகள் போதாதென்று பன்னாட்டு அவையின் சட்டத்தின் பல இன்றியமையாத கூறுகளும் முன்வரைவில் பேசப்படவில்லை.
துன்புறுத்தலுக்குப் பின் பெறப்படும் வாக்குமூலங்கள்:
‘துன்புறுத்தியவருக்கு
எதிரான சான்றாகப் பயன்படும் வாக்குமூலத்தைத் தவிர பிற வாக்குமூலங்களை
வழக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்’ எனப் பன்னாட்டு அவையின் சட்டத்தின்
பதினைந்தாவது கூறு சொல்கிறது. ‘வழக்கு விசாரணையில் துன்புறுத்தல்
கட்டாயத்தால் ஒருவர் தம்மைத் தாமே குற்றச்சாட்டுக்கு ஆளாக்குவதை மட்டுமே
அரசியல் சட்டத்தின் 20(3) ஆவது கூறு தடுக்கிறது; ஆனால்
குற்றச்சாட்டப்பட்டுள்ள ஒருவர் துன்புறுத்தலின் காரணமாக இன்னொருவரைக்
குற்றம் சுமத்துவது அரசியல் சட்டத்தின் கீழ்ச் சான்றாக
எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க,
விசாரணையில் பங்கேற்காத அதேவேளை வழக்குகளில் சான்றாகத் திகழக்கூடிய
செயலாக்க இயக்குநரகம், புலனாய்வு அமைப்புகள், வருவாய்ப் புலனாய்வு
இயக்குநரகம் ஆகிய அரசு அமைப்புகள் கூடத் துன்புறுத்தலிலும் இழிவாக
நடத்துதலிலும் ஈடுபடுகின்றன என்கிறது உச்சநீதிமன்றம். 1999ஆம் ஆண்டின்
மராட்டிய மாநில ஒருங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமோ காவல்துறையிடம்
கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தைச் சான்றாகக் காட்டலாம் என்கிறது.
ஆனால் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர் தாம் தம்மைக் குற்றப்படுத்திக்
கூறிய ஒப்புதல் வாக்குமூலங்கள் நெருக்கடியில் கூறியவை என்பதை மெய்ப்பிக்க
இயலாது என்பதே இயல்புநிலை. இந்நிலையில் இது போன்ற சட்டங்கள் அரசு அலுவலர்
துன்புறுத்தலை மேற்கொள்ள வழங்கப்பட்ட சலுகையாக அமைந்து விடும் வாய்ப்புகள்
உள்ளன.
நாடு கடத்துதல், ஏதிலி (அகதி) ஒப்படைப்பு, பிற நாட்டிடம் ஒப்படைத்தல் ஆகியன:
துன்புறுத்தலுக்கு ஏதுவாக
நாடுகடத்துதல், ஏதிலியாக ஒப்படைத்தல், பிற நாடுகளிடம் ஒப்படைத்தல் ஆகிய
செயல்களை ஒரு நாடு செய்யக்கூடாது எனப் ப. அ. சட்டத்தின் மூன்றாவது கூறு
கூறுகிறது. இதைப்பற்றி அரசின் முன்வரைவோ ஏதும் கூறாமல் அமைதி காக்கிறது.
1951ஆம் ஆண்டு ஏதிலிகள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தாத இந்தியாவில்,
ஏதிலிகள் பாதுகாப்புக்கெனத் தேசியச் சட்டங்களும் இல்லை. மேலும் அண்மைக்கால
உலகச் சூழலைக் கருதும்போது பிற நாட்டிடம் ஒப்படைப்பதைத் தடுப்பது என்பது
இன்றியமையாததாக அமைகிறது.
மீளாய்வு இயங்குமுறைகள்:
விசாரணை மரபுகளையும்
சிறைக்காவல் கவனிப்புகளையும் மறு ஆய்வு செய்யும் முறைகள் பற்றி
முன்வரைவில் எவ்விதக் குறிப்பும் இல்லை. சிறையில் அடைக்கப்பட்டோருக்குப்
பணியாற்றும் சட்ட அலுவலர்கள், மருத்துவர்கள், பொது ஊழியர்கள் ஆகியோருக்கு
அளிக்கப்பட வேண்டிய உரிய பயிற்சிகள் பற்றியும் முன்வரைவில் ஏதுமில்லை.
இப்படிப்பட்ட குறைபாடுகள் துன்புறுத்தலைத் தடுப்பது என்பதையே நீர்த்துப்
போகச் செய்து விடுகின்றன.
சட்ட அறிஞர்களை உடனடியாக அணுகுதல்:
சிறைக் காவலில்
இருப்போர்க்கு நடத்தப்படும் துன்புறுத்தல்களைத் தடுப்பதில்
வழக்கறிஞர்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. ஆனால் அவர்களை அணுகுவதற்கு
வழங்கப்பட வேண்டிய முறைமைகள் பற்றி முன்வரைவில் எக்குறிப்பும் இல்லை.
நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைப்பது, இருபத்து நான்கு நேரத்திற்குள்
நீதிபதி முன் நேர்நிறுத்துவது, வழக்கறிஞரை அணுக வழி செய்யாதிருப்பது ஆகியன
துன்புறுத்தல் நடக்க ஏதுவாக அமைந்துவிடும். இன்னும் சொல்லப்போனால்,
காவலில் வைக்கப்பட்டுள்ளோர் துன்புறுத்தல் எனத் தவறாகக் கூற
வழிவகுத்துவிடும்.
விருப்ப நெறிமுறை:
அ) பாதுகாப்பு வழங்குவதற்காகப் பல்வேறு
இடங்களை நேரில் கண்டு துன்புறுத்தலைத் தடுக்கப் பரிந்துரைகள் அளிக்கும்
பன்னாட்டுத் துணைக்குழு அமைத்தல்
ஆ) நாடுகள் தேசிய அளவிலான தற்சார்புத் தடுப்புமுறைகள் உருவாக்குதல்
இ) பன்னாட்டுத் துணைக்குழுவிற்கும் தேசியக் குழுக்களுக்கும் காவலில் இருப்போரைக் கண்காணிக்கும் உரிமையை நாடுகள் வழங்குதல்
ஆகியனவற்றைப் பன்னாட்டு அவையின் விருப்ப
நெறிமுறை குறிப்பிடுகிறது. இவ்விருப்ப நெறிமுறை பற்றியும் முன்வரைவு ஏதும்
பேசவில்லை. பன்னாட்டு அவையின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆர்வமும்
துன்புறுத்தலைத் தடுக்கும் எண்ணமும் அரசுக்கு உண்மையிலேயே இருந்தால்
இவ்விருப்ப நெறிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும்.
முடிவுகளும் பரிந்துரைகளும்:
‘மானிடத்தின் மேன்மை மீது நடத்தப்படும்
அப்பட்டமான அத்துமீறல், இழிவு’ என்று உச்சநீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்ட
துன்புறுத்தல் இந்தியாவின் முதன்மைச் சிக்கலாகவே நீடித்து வருகிறது.
1993ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் நுழைய அரசால் தடைவிதிக்கப்பட்டிருக்கும்
பன்னாட்டு அவையின் துன்புறுத்தலுக்கான விசாரணை அலுவலர், இந்தியாவில்
பரவலாக நடக்கும் துன்புறுத்தல்களைத் தொடர்ந்து கண்டித்து வருகிறார். அவர்
கண்டிப்பதற்கு ஏற்ப அரசின் முன்வரைவில் பன்னாட்டு அவையின் சட்டத்தின் பல
கருத்துகள் விடுபட்டுள்ளன.
இவ்வாறு பலவற்றைக் கருத்தில் கொள்ள, சட்ட முன்வரைவில் கீழ்க்குறிப்பிட்டுள்ள அடிப்படைக் கூறுகளைச் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
-
அரசு அலுவலர்களை விசாரிக்கத் தேவைப்படும் அரசு ஒப்புதல் தேவை எனக்கூறும் ஆறாவது பிரிவை நீக்குதல்
-
துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டோருக்கு அரசிடம் இழப்பீடு பெறுவதற்கான முறையான வழிமுறைகளை உருவாக்குதல்
-
குறிப்பிட்ட காலத்திற்குள் துன்புறுத்தலுக்கு ஆளானோர் என்னும் ஐந்தாவது பிரிவை நீக்குதல்
-
கொடுமைப்படுத்துதல், இரக்கமற்று நடத்துதல் ஆகியவற்றையும் பன்னாட்டு அவையின் சட்டம் குறிப்பிட்டுள்ளவாறு துன்புறுத்தலோடு சேர்த்துத் தடுக்கப்பட்ட செயல்கள் என மூன்றாவது பிரிவையும் நான்காவது பிரிவையும் விவரித்தல்
-
தகவல்களைப் பெறுவதற்காகத் துன்புறுத்தல், தண்டித்தல், அச்சுறுத்தல், பாகுபடுத்தல் ஆகியனவும் துன்புறுத்தும் செயல்பாடுகள் என உறுதியளித்தல். இவையனைத்தும் துன்புறுத்தலின் பிரிவுகளே அன்றித் துணைபோகும் செயல்கள் இல்லை என உறுதியளித்தல்.
-
சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்கைகளால் ஏற்படும் வலி, துன்பம் ஆகியவற்றை விசாரிக்கத் தேவையில்லை என்னும் மூன்றாவது பிரிவை நீக்குதல்
-
துன்புறுத்திப் பெறப்படும் சான்றுகளை நீதிமன்றங்கள், விசாரணை ஆணையங்கள், நீதித்துறை சார் அமைப்புகள் ஆகியன ஏற்றுக்கொள்ளா எனத் தடை கொண்டு வருதல்
-
ஓரிடத்திற்கு நாடு கடத்தப்படும் மனிதர்கள், அங்குச் சென்றால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சூழல் இருக்குமேயானால் அவ்விடத்திற்கு அனுப்பபடுவதைத் தடுத்தல்
-
விசாரணைமுறைகளைக் கவனித்துத் துன்புறுத்தலைத் தடுக்கும் வகையில் போதிய மாற்றங்களையும் காவலில் வைப்பதற்கான கட்டுப்பாடுகளில் மாற்றங்களையும் கொண்டு வருதல்
-
சிறையில் அடைப்பது, விசாரிப்பது ஆகியவற்றில் ஈடுபடும் உள்நாட்டுச் சட்ட அலுவலர்கள், இராணுவ அலுவலர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர்க்கு உரிய கல்வியும் பயிற்சியும் அளித்தல்
-
சிறையில் அடைக்கப்பட்டோருக்கும் காவலில் இருப்போருக்கும் உரிய இலவசச் சட்ட உதவி கிடைக்க உறுதியளித்தல்
-
பன்னாட்டு நாடுகள் சட்டத்தின் விருப்ப நெறிமுறைப் பகுதிகளை இந்தியாவில் செயல்படுத்த ஒப்புதல்
-
துன்புறுத்தலுக்கான பன்னாட்டு அவையின் விசாரணை அலுவலரை இந்தியாவிற்கு வர அழைத்தல்
(கட்டுரை: 19.06.2010 அன்று வெளிவந்த
‘எகானமிக் அண்டு பொலிடிகல் வீக்லி’ இதழில் இரவி நாயர் புதுதில்லியில் உள்ள
மனித உரிமைகள் ஆவணமாக்கலுக்கான தென்னாசிய மையத்துடன் இணைந்து எழுதியது)
No comments:
Post a Comment