உப்புச் சப்பில்லாத கல்வி உரிமைச் சட்டம் 2009
1991 ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை
இந்திய அரசின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது முதல், இந்திய அரசியல்,
சமூக, பொருளாதார, கலாச்சார அரங்கில் மிகப்பெரும் தாக்கத்தை அது வேகமாக
ஏற்படுத்தி வருகிறது. அதன் விளைவாக, எப்போதும் இல்லாத அளவிற்கு, யாரும்
கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வகையில் இலஞ்சமும் ஊழலும் புரையோடிப்
போய், அதுவே வாழ்வு முறையாக மாறி வருகிறது. அரசுகளின் முழுமையான
திறன்களும் ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களின் நலன்களை உறுதி செய்து அவை கொள்ளை
இலாபம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதற்காகவே பல விதமான
சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
சட்டங்களை இயற்றும் நடைமுறையில் அரசியல்
அமைப்பின் அடிப்படைக்கூறுகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. நீதிமன்றங்களும்
அவற்றைக் கண்டுகொள்வதில்லை. சட்டங்களை அமல்படுத்துவதிலும் சட்டத்திற்கு
சட்டம் வௌ;வேறு அளவீடுகள் பின்பற்றப்படுகின்றன. சட்டத்தின் முன் அனைவரும்
சமம் என்பதெல்லாம் வெறும் ஏட்டளவில்தான் உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் அரசு
நடத்தும் சாராயக் கடைகளில் மட்டும்தான் சாதி, மத, வர்க்க பேதமில்லாமல்
‘குடி’மக்கள் சம உரிமை பெற்றிருந்தனர். அதற்கும் புதிய அரசின் ‘டாஸ்மாக்’
நிர்வாக இயக்குநர் ‘வேட்டு’ வைத்துவிட்டார். மதுக்கடைகளில் 2 வகையான
மதுக்கடைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒன்று ஏழைகளுக்கென்று
தற்போதிருக்கும் சாதாரண மதுக்கடைகள், மற்றொன்று மேட்டுக்குடிகள்
கூச்சமின்றி வந்து கௌரவமாகக் குடித்துவிட்டுச் செல்லும் வகையில் ‘எலைட்
பார்’ என்ற மேம்படுத்தப்பட்ட மதுபானக் கடைகள். ஆக இருந்த சமத்துவமும்
இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
தேவையான சட்டங்களை இயற்றப்படுவதில்
அரசுகளுக்கு அக்கறையில்லை. குறிப்பாக, பெண்களுக்கான இட ஒதுக்கீடு, தலித்
கிறித்தவர்களையும் அட்டவணை சாதியினராக பிரகடனப்படுத்துதல், நிலம்
கையகப்படுத்துதல், லோக்பால் மசோதா போன்றவற்றை பல ஆண்டுகளுக்குப் பிறகும்
நடுவனரசு நெடுங்காலமாக கிடப்பில் போட்டு வருகிறது. சிவில் சமூகத்தின்
மாபெரும் எழுச்சிமிக்க போராட்டங்களுக்குப் பிறகும் அரசின் இத்தகையப்
போக்கில் பெரும் மாறுதல் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை.
இயற்றப்படும் சட்டங்களிலும்,
‘கார்ப்பரேட்’ முதலாளிகளுக்கான சட்டங்கள் என்றும் சாமானியர்களுக்கான
சட்டங்கள் என்றும் வகைப்பாடு. முதல் வகைச் சட்டங்கள் அச்சுப்பிசகாமல்
முழுமையாக எவ்வித தடங்கலுமின்றி அமலாக்கம் செய்யப்படுவதும், இரண்டாம்
வகைச் சட்டங்கள் ஏதோ கடமைக்கென்று இயற்றப்பட்டு அவற்றின் அமலாக்கம் பற்றி
யாரும் அலட்டிக்கொள்ளாத போக்கும் அதிகரித்து வருகிறது.
உதாரணத்திற்கு முதல்வகையில் சிறப்புப்
பொருளாதார மண்டலச் சட்டம், 2005 யும், இரண்டாம் வகையில் கல்வி உரிமைச்
சட்டம், 2009 யும் கூறலாம். சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம், 2005
இயற்றப்பட்டவுடன் விதிகள் உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே, முழுவீச்சில்
அரசே அமல்படுத்த ஆரம்பித்து விட்டது. இச்சட்டத்தில் அரசியலமைப்புச்
சட்டத்திற்கெதிரான பல அம்சங்கள் இடம் பெற்றிருந்த போதும் உச்சநீதிமன்றம்
கூட தலையிட மறுத்து விட்டது.
அதற்கு நேர்மாறாக, கல்வி உரிமைச் சட்டம்,
2009 உருவாக்கப்பட்ட போதே, பல ஓட்டைகளையுடையதாக பயனற்ற சட்டமாக
உருவாக்கப்பட்டுள்ளது. சட்டத்தை அமலாக்கம் செய்வதற்கு 5 ஆண்டு கால அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது. அதுவே இச்சட்டத்தை ஒன்றுக்கும் உதவாத ஒரு சட்டமாக
ஆக்குவதற்கான ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து
10 ஆண்டுகளுக்குள் 14 வயது வரையுள்ள அனைவருக்கும் ‘இலவசக் கல்வி’ உறுதி
செய்யப்பட வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரசியலமைப்புச்
சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள நெறிமுறைகள் வசதியாக மறைக்கப்பட்டு, 60
ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உதவாத சட்டத்தை 2009 ல் இயற்றி அதை அமலாக்கம்
செய்ய 5 ஆண்டு கால அவகாசம் கொடுத்திருப்பது என்பது இங்குள்ள சாமானிய
மக்களுக்கெதிரான அரசின் மோசடி என்றுதான் சொல்ல வேண்டும்.
தரமான கல்வியை மக்கள் பெற்று விடக்கூடாது
என்பதில் ஆள்பவர்கள் தொடர்ந்து கருத்துடன் இருக்கிறார்கள். அப்போதுதானே,
ஒட்டுமொத்த மக்களையும் சிந்திக்க இயலாத நிலையில் வெறும் ஓட்டுப்
போட்டுவிட்டு, தமது உரிமைகள் அனைத்தையும் அடகுவைக்கும் ஓட்டுவங்கிகளாக
வைத்து நிரந்தரமாக ஆள முடியும்!
கல்வி உரிமைச் சட்டத்தின் ஓட்டைகள்:
1. இச்சட்டம் 2005 லேயே தயார். ஆனால்,
4.8.2009 ல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு 1.4.2010 ல் தான் இச்சட்டம்
நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. உலகில் இந்தக் கல்வி உரிமைச் சட்டத்தை இயற்றிய நாடுகளில் இந்தியா 135 ஆவது நாடாகும். இதைவிட கேவலம் வேறென்ன இருக்க முடியும்?
3. கல்வி உரிமைச் சட்டத்தைப் படிப்படியாக
5 ஆண்டுகளில் அமல்படுத்துவது என்ற அரசின் கொள்கை முடிவால், சட்டம்
நடைமுறையிலுள்ளதா என்பது யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து மத்திய
மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை. எனவே இந்த சட்டம்
நடைமுறைப்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்று உண்மையில் கல்வி அதிகாரிகள்
உட்பட யாருக்கும் தெரியவில்லை. பெரும் குழப்பம் நீடிக்கிறது.
4. இச்சட்டத்தை அமல்படுத்த குறைந்த
பட்சம் ரூ. 2, 31, 000 கோடி தேவை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவைப்படும்
நிதியில் 60 முதல் 70 சதவிகிதம் வரை மத்திய அரசு ஒதுக்குவது என்றும்
மீதியை மாநில அரசு வழங்குவது என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சில
மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மத்திய அரசே 100 சதவிகித நிதியை
வழங்குவது என்று ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிதியை
ஒதுக்குவதற்கு எந்த முயற்சியையும் மத்திய மாநில அரசுகள் இதுவரை
எடுக்கவில்லை. 2010-2011 ஆம் ஆண்டில் மத்திய அரசு இந்தச் சட்டத்தை
நடைமுறைப்படுத்த கூடுதலாக ஒதுக்கிய நிதி வெறும் ரூ. 4000- கோடி மட்டுமே.
5. எத்தனை மாநிலங்கள் இந்தச் சட்டத்தை
ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளன என்பது இன்னும் தெரியவில்லை.
சில மாநிலங்களில் இப்படிப்பட்ட சட்டம் உருவாக்கப்பட்டதே மக்களுக்கு
தெரியாத நிலைதான் நீடிக்கிறது.
6. இச்சட்டத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம்
நாடு முழுவதும், 10 இலட்சம் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்
கூடுதலாகத் தேவை. அப்போதுதான் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று சட்டம்
சொல்லும் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை உறுதி செய்ய முடியும்.
அதற்காக மத்திய மாநில அரசுகள் இதுவரை சிறு நடவடிக்கையிலும் இறங்கவில்லை.
7. பள்ளி கட்டமைப்பு வசதிகள் மிக
அவசியமான ஒன்று. இன்று பல மாநிலங்களில் எந்தவொரு அடிப்படை
வசதியுமின்றிதான் பல ஆயிரம் பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டிலேயே பல கிராமப் பள்ளிகளில் இதுதான் நிலை. அப்படியிருக்கும்
போது மற்ற மாநிலங்களின் நிலையை சொல்லவேத் தேவையில்லை. இவற்றை உறுதிசெய்ய
கடந்த ஆண்டுகளிலும், நடப்பாண்டிலும் அரசுகள் எந்த முயற்சியும்
எடுக்கவில்லை.
8. பல தனியார் பள்ளி நிறுவனங்களும்,
சிறுபான்மையினர் பள்ளி நிறுவனங்களும் இந்தச் சட்டத்தை எதிர்த்து
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்துள்ளன. தங்கள் அடிப்படை உரிமைகள்
பறிபோவதாக இந்த நிறுவனங்கள் தங்கள் மனுவில் உறுதிபட தெரிவித்துள்ளன.
9. 6 முதல் 14 வயது வரையுள்ள
குழந்தைகளின் கல்வி உரிமையை மட்டுமே அடிப்படை உரிமையாக இந்தச் சட்டம்
பிரகடனம் செய்கிறது. 5 வயது வரையுள்ள குழந்தைகள் பற்றி எதுவுமே பேசவில்லை
என்பது ஒரு மாபெரும் குறையாகப் பல சமூக ஆர்வலர்களால்
சுட்டிக்காட்டப்படுகிறது.
10. இந்தச் சட்டத்தின்படி 14 வயது
நிரம்பிய குழந்தை வெறும் 8 ஆம் வகுப்பு மட்டுமே படிக்கம் வாய்ப்பு
கிடைக்கிறது. அதிலும் சட்டம் சொல்லுகின்ற நடைமுறைகளைப் பாடத்திட்டமாக
பின்பற்றினால், எந்தளவிற்கு அவர்கள் வாழ்வுக்கான அறிவு பெற்றிருப்பார்கள்
என்பது கேள்விக்குறிதான். அந்த 8 ஆம் வகுப்பு கல்வியை வைத்துக் கொண்டு அக்
குழந்தைகள் வேறு என்ன செய்ய முடியும்?
11. பல நாட்டு அரசுகளும் உயர்கல்வி வரை
இலவசமாக தரமான கல்வியை நாட்டு மக்களுக்கு வழங்குவதோடு, கல்வி பெற
மக்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுத்து மாண்புறச் செய்கின்றன. ஆனால், நம்
நாட்டில் வெறும் 8 ஆம் வகுப்பு வரை சிறந்த கல்வியைப் பெறுவது பல கோடி
குழந்தைகளுக்குக் குதிரைக் கொம்பாகவே இருக்கிறது.
12. மாற்றுத் திறனாளிகளின் கல்வி உரிமை
குறித்து பலவற்றை இந்தச் சட்டம் சொல்கிறது. ஆனால் அதற்கான கட்டமைப்பு
வசதிகள் குறித்து எதுவுமே சட்டத்தில் சொல்லப்படவில்லை.
அந்த அளவிற்கு பல ஓட்டைகளைக் கொண்ட
சட்டமாக இதை இயற்றியிருப்பது ஆள்வோரின் சதியையே அம்பலப்படுத்துகிறது.
இந்தியாவில், வர்ணாசிரம பாகுபாடு என்றென்றும் நிலைநிறுத்தப்பட வேண்டும்
என்பதில் ஆளும் பார்ப்பன – பனியா கும்பல்கள் கண்ணும் கருத்துமாகவே
இருக்கின்றன. 5 ஆண்டு நிறைவில்தான் இந்தக் கல்வி உரிமைச் சட்டத்தின்
வீச்சு எப்படி இருக்கிறது என்பதை அனைவரும் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment