வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Tuesday, 27 August 2013

உடல், வன்முறை, உரிமை - இந்திய குற்றவியல் சட்டம் (திருத்தியமைப்பு) மசோதா 2010

உடல், வன்முறை, உரிமை - இந்திய குற்றவியல் சட்டம் (திருத்தியமைப்பு) மசோதா 2010


பாலியல் என்பது எப்பொழுதும் முரண்பாடான சூழல்களில் இயங்கும் ஒன்றாக இருக்கிறது. ஒருபுறம் நமது பாலியலை, அதனை உண்டாக்கும் ஆசை, விழைவு, காதல், காமம் ஆகியவற்றை நமது தனிப்பட்ட வெளி சார்ந்தவையாக, நம் அகவெளி சார்ந்தவையாகக் கருதுகிறோம். எனினும் பாலியல் குறித்த கண்காணிப்பும் ஒரு collective, ஒட்டுமொத்த இனம் புரியாத பீதியும் எப்பொழுதும் நிலவுகிறது. மற்றவர்களின் பாலியலைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அரசும் சட்டமும் கூட பாலியல் குறித்து அதிக கவனம் செலுத்துகின்றன. திருமணமான கணவன் மனைவிக்குள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஏற்படும் பாலியல் வெளிப்பாடு தவிர வேறொன்றும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று பயப்படுகிறோம். இவை தவிர பல விதங்களில் நமது பாலியல்கள் வெளிப்படுவது உண்மை எனினும் அவற்றைச் சுற்றி அமைதி நிலவச் செய்கிறோம்.
பாலியல் வன்முறை என்பது நம்மை ஏனோ மற்ற வன்முறைகளைக் காட்டிலும் அதிகமாகக் கொதித்தெழச் செய்கிறது. அதுவும் பெண்ணுடல், அதன் ஒழுக்கம், விதிமீறல்கள், அதன் மீதான வன்முறை ஆகியவை ஒரு சமூகத்தின் அடையாளத்திற்கும் மதிப்பிற்கும் ஏனோ அடிப்படையாக்கப் பட்டிருக்கின்றன. பெண்ணுடலில் பொதிந்திருப்பதாகக் கருதப் படும் "கற்பும்" அதன் வீரியமும் அவை குறித்த புதினங்களும் தமிழ்ச் சமூகம் போன்ற பல சமூகங்களுக்கு அடையாள மொழி என்றும் ஆகிவிட்டிருக்கிறது. எனவே பாலியல் என்பது தனிமனித செயல்பாடு என்று மட்டும் நாம் எண்ணுவோமேயானால் அது தவறு. சமூகம், அரசு, நிறுவனங்கள், மதங்கள், கதைகள், நீதித் துறை மற்றும் சட்டம் போன்றவற்றின் சொல்லாடல்கள், சினிமா ஆகிய அனைத்திற்கும் நம் பாலியலுக்கும் நெருக்கமான தொடர்புண்டு.
2010 ஆம் ஆண்டு ஐபிசி 377 தவிர இந்தியாவில் பாலியல் குறித்த மற்றொரு சட்டம் பற்றிய விவாதங்கள் நாடெங்கிலும் நடைபெற்றன. இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் இந்திய குற்றவியல் சட்டத்தின் சில பகுதிகளைத் திருத்தி அமைப்பதற்கான மசோதா ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்து அதற்கான படிவம் ஒன்றை மக்களமைப்புகளின் பார்வை மற்றும் விமர்சனத்திற்கென வெளியிட்டது. Criminal Law (Amendment) Draft Bill 2010 என்றழைக்கப்பட்ட இது குறிப்பாகப் பாலியல் வன்முறை குறித்த சட்டங்களில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர முனைந்தது. இச்சட்டங்களில் பல பத்தாண்டுகளாகப் பெண்ணிய இயக்கங்களும் பெண்கள் அமைப்புகளும் மற்ற மனித உரிமை அமைப்புகளும் மாற்றங்களைக் கோரி வருகின்றன.
பெண்ணியப் பார்வையில் சட்டம், தண்டனை இவை குறித்து மட்டுமல்லாமல் சட்டத்தின் மொழியிலும் சொல்லாடலிலும் மாற்றம் தேவை என்பது வலியுறுத்தப்பட்டு வருகிறது. உதாரண மாக, "பலாத்காரம்" அல்லது "கற்பழிப்பு" என்ற சொல்லாடல் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ‘கற்பு’ என்பது பெண்ணுட லில் (மட்டும்) பொதிந்திருக்கும் ஏதோ என்றும் அது ஆணின் ஒருவித செயல்பாட்டினால் "அழிக்கப்"பட்டு அதன்பின் பெண் அதனை நிரந்தரமாய் இழக்கிறாள் என்பது போன்ற பிற்போக்கான கருத்தாக்கங்களை இத்தகைய சொல்லாடல் உண்டாக்கி அவற்றை என்றும் உயிர்ப்புடன் வைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் பெண்ணுடலின் பாதுகாப்பிற்கும் "கற்பின்" இருத்தல்-இல்லாமைக் கும் ஆண்மைக்கும் நேரடித் தொடர்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்ணுடலின் கற்பைப் பாதுகாப்பதே ஆணின் தலையாய கடமை என்றும் ஒரு சமூகத்தையோ குடும்பத்தையோ அல்லது ஒரு தனி ஆணையோ இழிவு செய்யவேண்டுமெனில் அந்தச் சமூகத்தின் குடும்பத்தின் ஆணிற்குச் "சொந்தமான" பெண்களைக் "கற்பழிப்பது" என்பது வரலாற்றில் அடிக்கடி தென்படும் செயல்பாடு. இந்தக் கற்பழிப்புப் பரிமாற்றத்தை நிகழ்த்துவதில் வீரியமும் ரோஷமும் கொண்ட ஆண்மை ஏதோ ஒருவகையில் நிறைவடைவதாக நம் திரைப்படங்களும் தொடர்ந்து காண்பித்து வருகின்றன.மேலும் "கற்பழிக்கப்படுவதிலிருந்து" பெண்களைக் காப்பது கதாநாயகர்களின் கடமை என்றும் ஆகிவிட்டிருக்கிறது.
இத்தகைய பண்பாட்டுச் சூழலில் பாலியல் குறித்த இத்தகைய எண்ணங்கள் நிலவுகையில் பாலியல் வன்முறை என்பதும் இவற்றையட்டியே புரிந்துகொள்ளப்படுகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் மீதான வன்முறையே பாலியல் வன்முறை என்று வரையறுக்கப்பட்டு விடுகின்றது. இதிலும் ஒரு சிலரால் ஒரு சில விதங்களில் நிகழும் பாலியல் வன்முறையே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் நிலையும் உண்டு. உதாரணத் திற்கு, ஒரு திருமணத்திற்குள், கணவன் தன் மனைவியைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க இயலும் என்ற சாத்தியத்தையே எண்ணிப்பார்க்கக் கூடிய பக்குவம் நம் சட்டத்திற்கு இல்லை. 2010இல் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாற்றங்கள் கூட Martial Rape என்பதைக் குற்றமென்று கருதக்கூடிய புரிதலைக் கொண்டிருக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
ஒரு பெண் பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடிய வயதைத் தாண்டியவளாக இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டிருப்பது அவளது கணவனாக இருப்பின் அது பாலியல் குற்றமாகக் கருதப்பட மாட்டாது என்ற "விலக்கை" புதிய மசோதாவின் பிரிவு 375 கூறுகிறது. இது மனைவி கணவனுக்குச் சொந்தம் அவனது சொத்து என்ற பண்பாட்டுக் கருத்தியலின் பிரதிபலிப்பே அன்றி வேறெதுவுமில்லை. குடும்பத்தில் பெண்கள் சந்திக்கும் வன்முறையை தண்டனைக்குள்ளாக்குவதிலும் இத்தகைய எண்ணமே தடையாக இருந்து வருகிறது. குடும்பம், திருமணம் ஆகியவற்றை விமர்சனத் திற்கும் வன்முறைக்கும் அப்பாற்பட்ட புனித அமைப்புகளாக முதலில் கட்டமைத்துவிட்டதால், இந்த அமைப்புகள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உகந்தவை என்று சித்திரித்து விட்டதால், அவற்றில் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் வன்முறை நிகழும்பொழுது அவற்றைக் கவனித்து குற்றமாகக் கருதி ஆராயும் பக்குவம் நம் சட்டத்திற்கும் அதன் காவலர்களுக்கும் இல்லை. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் சிறார் மீதான பாலியல் வன்முறை பெரும்பாலும் குடும்பங்களுக்குள்ளும் குடும்பங்களுக்கு மிக நெருக்கமானவர்களாலும் ஏற்படுகிறது என்று பல ஆய்வுகள் காண்பிக்கும் பொழுது, அதனை முழுதுமாக உள்வாங்கிக் கொண்டு நம் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். 2010இல் சட்ட அமைச்சகத்தின் முயற்சியாகக் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த தனி சட்டப்பிரிவு ஏற்படுவதற்கான முயற்சியும் தொடங்கப்பட்டிருக்கிறது).
குற்றவியல் சட்டம் (திருத்தியமைப்பு) மசோதா 2010 குறித்த விவாதங்கள் பெண்கள் மற்றும் சிறார் என்ற இரு பிரிவினர் குறித்து மட்டும் இருக்கவில்லை. ஏனெனில் கடந்த பல ஆண்டுகளில்; பால், பாலியல் குறித்த நமது புரிதலும், உடல்கள் மற்றும் வன்முறை குறித்த நமது புரிதலும் விரிவடைந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, ஆண் பாலடையாளத்திலிருந்து பெண் பாலடையாளத்திற்கு மாறும் அரவானிகள் திருநங்கைகள் பற்றிய நமது அறிவு விரிவடைந் திருப்பதுடன் இவர்கள் மாநில அரசுகளின் நலத்திட்டங்களின் பார்வைக்குள் வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு அரவானிகள் நலவாரியம் அமைத்துத் திட்டங்கள் பலவற்றை அறிவித்துச் சிலவற்றைச் செயல்படுத்தியும் வருகிறது. உதாரணமாக, கல்லூரிகளில் இட ஒதுக்கீடும் இலவச பால் மாற்று அறுவை சிகிச்சையும் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டன. இத்தகைய நிகழ்வுகள் குறைந்தபட்சமாக ஒரு அரசு, ஒரு சமூகத்தின் இருப்பை அங்கீகரிப்பதைக் காட்டுகிறது. இந்நிலையில் மாற்றுப் பால்/பாலின அடையாளம் ஏற்கும் இச்சமூகத்தினர் மீதான பாலியல் வன்முறையையும் அங்கீகரிப்பது அவசியம். ஆனால் ஆண்-பெண் என்ற பாலின ஈரிணை (binary opposites) கட்டமைப்பில் செயல்படும் சட்டத்திற்கும் அதன் சொல்லாடலுக்கும் இது எளிதான காரியம் அல்ல.
அரவானி/ திருநங்கை/ ஹிஜ்ரா மக்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாகுபவர்களாகக் கருத அவர்களைப் "பெண்கள்" என்ற பிரிவின் கீழ் கருதுவதா அல்லது பல நிலைகளில் (குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உட்பட) மூன்றாம் பாலினமாகக் கருதப்பட்டுவரும் இவர்களைச் சட்டத்தில் தனி பிரிவாகக் கருதுவதா என்ற கேள்வி முக்கியமான ஒன்று. ஏனெனில், இது ஒரு தனி பிரிவினரைச் சட்டத்தில் இணைத்துவிடும் செயல்பாடல்ல. ஆண்-பெண் என்ற பாலின ஈரிணை நம் பொதுப்புத்தியிலும் அரசின் கண்ணோட்டத்திலும் சட்டத்தின் சொல்லாடலுக்கும் அடிப்படையாக அமைவது. படிவங்கள் நிரப்புவது, கழிவறை பகுப்பு, திருமணம், உடைகள் என்று எல்லா நிலையிலும் இரு பாலினங்களே இருப்பதாக எண்ணிச் செயல்பட்டு வருகிறோம். இந்த நிலையில் மற்றொரு பாலின அடையாளத்தின் இருப்பைச் சட்டம் போன்ற அதிகார மொழியில் இணைப்பது அவசியம். இச்சமூகத்தினர் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் வன்முறையைச் சட்டம் அங்கீகரிப்பது அவசியம்.
பாலியல் வன்முறை குறித்த இன்றைய விவாதங்களுக்கு மற்றொரு கூறும் உண்டு: இத்தகைய வன்முறைக்கு ஆண்கள் அப்பாற்பட்டவர்கள் என்றும் பாலியல் வன்முறையைப் பெண்கள் மீதும் சிறார் மீதும் அரவானிகள் மீதும் நிகழும் ஒன்றாக மட்டுமே, அதாவது perpetrators ஆக மட்டுமே, ஆண்களுக்கும் இதற்கும் தொடர்புண்டு என்று சிந்திப்பதும் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடே. ஆண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் யதார்த்தத்தை இது முழுவதுமாக நிராகரிக்கிறது. இது தவிர ஆண்களை விரும்பும் ஆண்கள், பெண்ணியல்பாக இருக்கும் ஆண்கள் ஆகியோர் மீது பெருமளவில் ஏற்படும் வன்முறை சட்டத்தின் கண்களுக்குத் தெரியவில்லை. இதனைத் தண்டனைச் சட்டப் பிரிவு 377 குறித்த விவாதங்களுடன் இணைத்துப் பார்ப்பது அவசியம்.
இரு ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவை அவர்கள் 18 வயதிற்கு மேலானவர்களாகவும் மனமொத்து அத்தகைய உறவில் ஈடுபடுபவர்களாக இருப்பினும் குற்றம் என்று கூறும் ஐ.பி.சி 377 அமலில் இருக்கும் பொழுதும் ஒருபாலீர்ப்பு, உறவு மற்றும் புணர்ச்சி குறித்த பிற்போக்கான கருத்துக்கள் சமூகத்தில் நிலவும் பொழுதும் தன் மேல் ஒரு ஆணால் பாலியல் வன்முறை ஏற்பட்டிருப்பதை மற்றொரு ஆண் வெளிப்படுத்துவது கூட அசாத்தியமாகிறது. மேலும், இன்றைய நிலையில் இந்தியச் சட்டம் வயது வந்த ஆண்கள், பாலியல் வன்முறைக்கு இலக்காகும் சாத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 18 வயதிற்கு மேலான பரஸ்பர ஒப்புதலுடன் செயல்படும் இருவருக்கு இடையிலான பாலியல் உறவு -- அவர்கள் ஒரு பாலினத்தவராக இருப்பினும் - தண்டனைக்கு உரியதல்ல என்று ஐபிசி 377ஐ மறுவாசிப்புச் செய்யும்படி 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் நாள் தில்லி உயர் நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் தீர்ப்பு தெரிவிக்கிறது. நீதிபதிகள் ஏ.பி. ஷா மற்றும் முரளீதர் அவர்களின் இந்தத் தீர்ப்பை நாடளவில் செயல்படுத்தும் பொழுது மாற்றுப் பாலியல் குறித்த முற்போக்கான விவாதங்களை மேற்கொள்ள முடியும். மேலும், ஒப்புதல் அல்லாத நிலையில் ஆண்கள் மீது ஏற்படும் பாலியல் வன்முறையையும் சட்டத்தின்கீழ் கவனிக்க வழிசெய்ய இயலும்.
மற்றொரு நிலையில் சட்டம் பெண்களை மட்டுமே பாலியல் வன்முறைக்கு உள்ளாபவர்களாகக் கருதுகிறது. சிறார் மீதான சூழல்களைத் தவிர்த்து மற்ற சூழல்களில் பெண்கள் மற்ற பெண்கள் மீதோ அல்லது ஆண்கள் மீதோ பாலியல் வன்முறையைச் செயல் படுத்த இயலும் என்கிற சாத்தியம் சட்டத்திற்கு மட்டுமன்றி பல பெண்கள் அமைப்புகளுக்கு ஏற்றுக்கொள்ள இயலாததாய் இருக்கிறது. இத்தகைய புரிதல் பெண்கள் மீது தவறாகப் பயன்படுத்தப்படும் என்றும் பொய் வழக்குகள் தொடருவதற்கான சாத்தியங்கள் ஏற்படும் என்பவை நியாயமான விவாதங்களே. குடும்பங்களில் மட்டுமன்றி பொதுச் சூழலில், பணியிடங்களில் ஆண்-பெண் அதிகாரச் சமன்பாடு கொஞ்சமும் இல்லாத நிலையில் பாலியல் வன்முறையைச் செயல்படுத்துவதில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களைக் கருதுவது அபாயகரமானது என்பதும் ஒரு விவாதம். பல சூழல்களில் பெண்கள் போராடிப் பெற்றிருக்கும் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புகளைத் தகர்ப்பதாக இது அமையும் என்ற அச்சம் உண்மையானது.
இவை மற்றும் வேறு பல காரணங்களினாலும் Criminal Law (Amendment) Draft Bill 2010 குறித்த விவாதங்களில் பல்வேறு நிலைப்பாடுகள் வெளிப்பட்டன. பொதுவாகப் பாலியல் வன்முறை குறித்ததாக இருக்கும் பிரிவு 375 பெண்கள் மீதான வன்முறை மட்டுமல்லாமல் ஆண்கள் மீதான வன்முறையையும் தண்டனை குரியதாகக் கருத வேண்டும் என்று சில குழுக்கள் வலியுறுத்தின. குறிப்பாக, அதிக அளவில் பாலியல் வன்முறையைச் சந்திக்கும் மாற்றுப் பாலியல் கொண்ட ஆண்கள், ஆண்களை விழையும் ஆண்கள், பெண்ணியல்பாக இருக்கும் ஆண்கள் ஆகியோரது குழுக்களும் பிரதிநிதிகளும் இதனை வலியுறுத்தினர். பாலினம் குறித்த நமது புரிதலில் இன்று பெருமளவில் மாற்றம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. பால்= பாலினம் என்ற மிக எளிமையான கட்டமைப்பைத் தாண்டி நெடுந்தொலைவு வந்திருக்கிறோம். பால் என்பது உடற்கூற்றைக் குறிக்கிறது என்றும் அதற்கும் பாலின வெளிப்பாட்டிற்கும் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும் என்பதில்லை என்பதைப் பெண்ணியக்- hyper - க்வீயர் (queer) கருத்தாக்கங்கள் நமக்குக் காண்பித்திருக்கின்றன. அதாவது, உங்கள் பிறப்புறுப்பைப் பொறுத்து உங்களது பாலினச் செயல்பாடு இவ்விதங்களில் இருக்க வேண்டும் என்பது சமூகக் கட்டமைப்பே என்றும் அவற்றில் எவ்வித உள்ளுண்மையும் பொதிந்திருக்க வேண்டியுதில்லை என்ற விவாதங்களும் நம் பால்-பாலின சிந்தனை உலகைப் பெருமளவில் மாற்றியமைத்திருக்கின்றன.
பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு சட்டப்பிரிவு திருத்தியமைக்கப்படும் பொழுது, பாலியல் வன்முறை போன்ற உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டிய நெருக்கடிச் சூழல்களைப் பற்றி விவாதிக்கையில் பல கூறுகளை ஒரே சமயத்தில் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது: வன்முறை, பாலியல், பால், பாலினம், வன்முறைக்கு உள்ளாகும் உடல்கள், வன்முறையைச் செயல் படுத்தும் உடல்கள், பாலியல் உறவுக்கு வழங்கப்படும் ஒப்புதல் என்றால் என்ன, அதை வழங்கும் நிலையில் இருப்பவர்கள் யார், எத்தகைய சூழலில் வழங்கப்படும் ஒப்புதல் ஒப்புதலாகக் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படலாம், எவை ஒப்புதல்கள் அல்ல, திருமணத்திற்கும் வன்முறைக்கும் உள்ள தொடர்பு என்ன, ஆணுடலும் பாலியல் வன்முறையும், ‘கற்பு’, அதன் ‘அழிப்பு’, போன்ற எண்ணற்ற கூறுகளை மனதில் கொள்ள வேண்டியுள்ளது.
பாலியல் எத்தகையதாக இருப்பினும் ஒன்று நிச்சயம்: அது எளிதானதல்ல.

No comments:

Post a Comment