இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம்
“குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்
கல்வி உரிமைச்சட்டம்” என்றொரு சட்டம் கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசால்
இயற்றப்பட்டது. பின்னர் இச்சட்டம் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்
அமலுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன போதிலும் தமிழ்நாடு
உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்றளவிலும் இச்சட்டம் தொடர்பாக மாநில
விதிகள் ஏதும் இயற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் அதிக எண்ணிக்கையிலான
குழந்தைகளையும், இளையோர்களையும் கொண்டுள்ள நாடு இந்தியா. ஆனால் அவர்களில்
மூன்றில் ஒரு பங்கு பிரிவினருக்கு இன்றளவும் கல்வி சென்றடையவில்லை.
இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் மேற்கண்ட சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடமும், கல்வி அளிப்பதன் வாயிலான சமூக
நீதியை உருவாக்கி சமத்துவத்திற்கு வழிவகுக்கும் சட்டம் என்று பரவலாக
பேசப்பட்டு வரும் இச்சட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து பார்க்க
வேண்டியது அடிப்படையான தேவையாகும்.
சிறப்பம்சங்கள்:
ஆறு வயதிலிருந்து பதினான்கு வயது
வரையுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகள் அனைவருக்கும் இச்சட்டம் பொருந்தும்.
தற்போது நடுநிலைப்பள்ளி வரை என வரையறுத்துள்ளது. பதினாறு வயது வரையிலான
குழந்தைகளும் இச்சட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்ற நோக்கில்
உயர்நிலைப்பள்ளி வரையிலும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மத்திய அரசுக்
கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. பட்டியலின பிரிவினர், பழங்குடியினர்,
சமூகம் மற்றும் கல்வியில் பின் தங்கியுள்ளோர், சமூகம், கலாச்சாரம்,
பொருளாதாரம், நிலப்பரப்பு, மொழி, பாலினம், மாற்றுத்திறனாளி போன்ற
காரணங்களால் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கும், அரசாங்கத்தால்
வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆண்டு வருமானத்திற்கும் குறைவான வருமானம்
பெறும் குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கும் கல்வி வழங்குதல்
மறுக்கப்படக்கூடாது. முதல் வகுப்பில் இவர்களது எண்ணிக்கை 25
விழுக்காட்டிற்கும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு
குழந்தையும் தொடக்கக்கல்வியைத் தொடர்ந்து படித்து முடிப்பதை தடுக்கக்கூடிய
வகையில் எந்தவிதமான கட்டணங்கள் செலுத்தவோ அல்லது செலவுகள் செய்யவோ
வேண்டியதில்லை.
ஆறு வயதுக்கும் மேற்பட்ட ஒரு குழந்தை
புதிதாக பள்ளியில் சேரும் பொழுது, அந்த குழந்தையின் வயதிற்கேற்ற வகுப்பில்
சேர்க்கப்படும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு வயதிற்கேற்ற வகையில் சிறப்பு
பயிற்சிகள் அளிக்கப்படும்.
விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பள்ளிகள்
தவிர இதர எந்த பள்ளியிலும், அக்குழந்தை அந்த வகுப்பில் சேர்ந்து
கொள்ளலாம். பள்ளி மாறும்போது மாற்றுச்சான்றிதழ் வழங்கிடுவதில்
தாமதப்படுத்தும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர்கள், துறை
வாரியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
பள்ளி அருகாமையில் இல்லாத பொழுது
இச்சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் அரசாங்கங்கள்
பள்ளியை நிறுவ வேண்டும். அரசாங்கமானது குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சிகள்
வழங்கப்படுவதோடு, ஒவ்வொரு குழந்தையும், பள்ளியில் சேர்க்கப்படுவதுடன்,
அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதையும், தொடக்கக்கல்வியினை முழுமையாக
பூர்த்தி செய்வதை உறுதிபடுத்திடவும், கண்காணித்திடவும் வேண்டும். அதே போல
நிறம், இனம், ஜாதி, பால், பிறப்பிடம் என்பது போன்றவைகள் தொடர்பான
எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் இருப்பதையும், இது போன்ற காரணங்களால்
குழந்தைகள் கல்வி பெறுவது தடுக்கப்படாமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதி
செய்ய வேண்டும்.
எந்த பள்ளியும், அப்பள்ளியில்
சேர்க்கப்படும் குழந்தைக்காக பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமிருந்து
நன்கொடை, பள்ளியால் அறிவிக்கப்பட்ட கட்டணம் தவிர்த்த இதர நிதி கேட்டல்,
கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட தலைக்கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது. அது
மீறப்படுவது உறுதி செய்யப்பட்டால், வசூலிக்கப்பட்டது போது பத்து மடங்கு
தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.
நீதிமன்றங்கள் ஏற்கனவே
அறிவுறுத்தியுள்ளபடி, குழந்தைகள் சேர்க்கப்படுவதற்காக, அவர்களுக்கோ,
பெற்றோர்களுக்கோ, பாதுகாவலர்களுக்கோ தகுதித் தேர்வு எதுவும்
நடத்தக்கூடாது. அதனை முதல் முறை மீறும் போது 5,000 ரூபாயும் தொடர்ந்து
மீறப்படும்போது ஒவ்வொரு முறையும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
தொடக்கக்கல்வி முடியும் வரையிலும்
எந்தவொரு குழந்தையும் ஓராண்டுக்கு மேல் ஒரே வகுப்பில்
வைத்திருக்கக்கூடாது. பள்ளியிலிருந்து வெளியேற்றவும் கூடாது. அதேபோல
எந்தவித தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயமில்லை.
வகுப்பறை வன்முறைகள் என்று பரவலாக
அறியப்படும் உடல்ரீதியான, மன ரீதியான துன்புறுத்தலுக்கு எந்தவொரு
குழந்தையும் பள்ளி நிர்வாகத்தால் ஆட்படுத்தப்படக்கூடாது. அது மீறப்படும்
பட்சத்தில் துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
ஒவ்வொரு பள்ளியிலும், பள்ளியில்
பணிபுரிபவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளியில் படிக்கும்
குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றோர்களை கொண்ட பள்ளி மேலாண்மை
குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்த குழுவில் 3/4 ¾ பங்கு என்ற
விகிதத்தில் பெற்றோர்கள் இடம் பெறும் வகையில் இருக்க வேண்டும்.
விகிதாச்சார முறைப்படி நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குடும்ப
பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு, இயற்கை சீற்ற
பணிகள், உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகள்
அல்லாத வேறு கல்வி சாராத எந்த நோக்கத்திற்காகவும் எந்தவொரு ஆசிரியரும்
வேலைக்கு அமர்த்தப்படக்கூடாது. எந்தவொரு ஆசிரியரும் தனிப்பட்ட கல்வி
பயிற்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.
பயிற்சி மொழி நடைமுறைக்கு சாத்தியமுள்ள
வரையில் குழந்தையின் தாய்மொழியிலேயே இருக்கவேண்டும். ஏற்கனவே
இயற்றப்பட்டுள்ள மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையமானது, இச்சட்டம்
தொடர்பாக எழும் மேல்முறையீட்டு புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.
விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள்:-
• உலகமயமாக்கல் சூழலில் கல்வி
வியாபாரமயமாக்கப்பட்டு வரும் வேளையில், தனியார் கல்வி நிறுவனங்களின்
கட்டணக் கொள்ளை தொடர்பாக விதிகள் ஏதுமில்லை.
• இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த தவறும் அல்லது மீறும் அதிகாரிகள் மீது வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
• “தலைக்கட்டணம்” என்பது அரசு நிர்ணயித்த கட்டணங்களுக்கு கூடுதலானது என்பதற்குப் பதிலாக, பள்ளி நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு கூடுதலானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நிர்ணயித்துக்கொள்ள வழிவகுக்கும்.
• தனியார் பள்ளியில் பயின்றாலும், குழந்தைகளுக்கு இலவச கட்டாயக்கல்வி அளிக்கப்பட வேண்டும்.
• கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளி மற்றும் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கை செய்யப்படும் பள்ளிகளுக்கு இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது பாகுபடுத்தும் கல்வி முறையாகும்.
• பயிற்று மொழி தாய்மொழியிலேயே என்று உறுதியாக இந்த சட்டம் ஏற்கவில்லை.
• தேசிய கல்விக்கொள்கை 1986 மற்றும் 1992க்கு ஏற்ற வகையில் இச்சட்டம் இயற்றப்படவில்லை.
• நூலகம் குறித்து பேசும் இச்சட்டத்தில் நூலகர் என்று ஒருவர் பணி நியமனம் குறித்து பேசவில்லை.
• இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த தவறும் அல்லது மீறும் அதிகாரிகள் மீது வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
• “தலைக்கட்டணம்” என்பது அரசு நிர்ணயித்த கட்டணங்களுக்கு கூடுதலானது என்பதற்குப் பதிலாக, பள்ளி நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு கூடுதலானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நிர்ணயித்துக்கொள்ள வழிவகுக்கும்.
• தனியார் பள்ளியில் பயின்றாலும், குழந்தைகளுக்கு இலவச கட்டாயக்கல்வி அளிக்கப்பட வேண்டும்.
• கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளி மற்றும் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கை செய்யப்படும் பள்ளிகளுக்கு இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது பாகுபடுத்தும் கல்வி முறையாகும்.
• பயிற்று மொழி தாய்மொழியிலேயே என்று உறுதியாக இந்த சட்டம் ஏற்கவில்லை.
• தேசிய கல்விக்கொள்கை 1986 மற்றும் 1992க்கு ஏற்ற வகையில் இச்சட்டம் இயற்றப்படவில்லை.
• நூலகம் குறித்து பேசும் இச்சட்டத்தில் நூலகர் என்று ஒருவர் பணி நியமனம் குறித்து பேசவில்லை.
இப்படியாக, விவாதத்திற்கு உட்படுத்தப்பட
வேண்டிய பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இயற்றப்பட்டு தற்போது ஆங்காங்கே
அமல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச கட்டாய கல்வி சட்டம் சமூக, பொருளாதார
ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் பல்வேறு வகையான பள்ளி கல்வி முறைகளை அகற்றி
விட்டு ஒரே மாதிரியான பொதுக்கல்வி திட்டத்தை அரசாங்கங்கள்
உருவாக்கிவிடுவது தான் இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படையான
மற்றும் நிலையான தீர்வுமாகும்.
ஏப்ரல் முதலாம் நாளை முட்டாள்கள் தினமாக
பன்னெடுங்காலமாக கருதப்பட்டு வரும் சூழலில், மேற்கூறிய அம்சங்களுடன் அதே
ஏப்ரல் முதல் நாளிலிருந்து இச்சட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு
அரசு அறிவித்துள்ளதில் உள் நோக்கம் எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
ஒரு வேளை அது உண்மையாக இருந்தால் ஏமாற்றத்தை எதிர்கொள்ளப்போவது
ஆட்சியாளர்கள் தான். மக்களுக்காகத் தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக
மக்கள் அல்ல என்பது சட்ட விதி.
No comments:
Post a Comment