மரண தண்டனையும் மனித உரிமைகளும்
“எவரையும் சித்திரவதை செய்யக்கூடாது;
கொடூரமாக, மனித தன்மையற்றுக் கேவலமாக நடத்தக்கூடாது; கொடூரமான, மனித
தன்மையற்ற, கேவலமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடாது” என 1948ஆம் ஆண்டு
இயற்றப்பட்டு, அப்போதே இந்தியாவால் கையெழுத்திட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட,
அகில உலக மனித உரிமை பிரகடனத்தின் பிரிவு 5 கூறுகிறது.
குற்றவியல்
குற்றங்களுக்காக, நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக விதிக்கப்படும் அதிகபட்ச
தண்டனையே மரண தண்டனையாகும். கொலை, வன்புணர்ச்சி, அரசுக்கெதிரான சதியில்
ஈடுபடுதல் உள்ளிட்ட ஏழு குற்றங்களுக்காக இந்தியாவில் மரண தண்டனை
வரையறுக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை வழங்குவதற்கு
அடிப்படையாக அமைவது, அந்த வழக்கினை விசாரணை செய்யும் அதிகாரிகளின்
புலனாய்வும், அதன் மூலமாகத் திரட்டப்பட்ட ஆவணங்களுமே. எதார்த்தம்
அப்படியிருக்க, காவல் துறையினர், குற்ற வழக்குகளைப் புலனாய்வு செய்து,
அந்த குற்றத்தின் உண்மையான பின்னணி குறித்தும், அதில் ஈடுபட்ட
குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றங்களின் முன்பாக நிறுத்தி,
அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தரும் விதங்களைக் குறித்தும் அறிந்திட,
தமிழக சட்டத்துறை வரலாற்றில் நடந்த இரண்டு வினோதமான வழக்குகளைச் சான்றாக
எடுத்துக் கொள்ளலாம்.
கடந்த 1991ஆம் ஆண்டில், விருதுநகர்
மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள்
என்பவரை, அவரது கணவர் வேலுச்சாமியும் மற்றும் இருவரும் சேர்ந்து கொலை
செய்து விட்டதாக காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். இந்த கொலை
தொடர்பாக, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்தது. அந்த ஊருக்கு
அருகே ஒரு பெண்ணின் பிணம் கிடந்ததாகவும் அது பாண்டியம்மாள்தான் என்றும்
கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தான்தான் தன் மனைவியை கொலை செய்ததாகவும்,
கொலைசெய்த விதம் குறித்து, நீதிமன்றத்தில் நடித்தும் காட்டினார்
பாண்டியம்மாளின் கணவர் வேலுச்சாமி. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ஒரு
பெண்மணி, அந்த நீதிமன்றத்தில் நேரில் வருகை தந்து, தனது பெயர்
பாண்டியம்மாள் என்றும், தன்னைக் கொலைசெய்து விட்டதாகத்தான் இந்த வழக்கு
நடைபெற்று வருகிறது என்றும் சாட்சியமளித்தார். பாண்டியம்மாள் உயிரோடு
இருக்கிறார் என்றால், கண்டெடுக்கப்பட்ட பிணம் யாருடையது? இன்று வரையிலும்
இது விடைதெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது. ஒருவேளை அந்த
பாண்டியம்மாள் சில ஆண்டுகள் கழித்து நீதிமன்றதின் முன் தோன்றியிருந்தால்?
கடந்த 1997ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள உப்புக்கோட்டை என்ற
ஊரைச் சேர்ந்த சுஜாதா என்பவர் காணாமல் போனார். இந்த நிகழ்வு தொடர்பாக,
காவல் துறையினர், அதே ஊரைச்சேர்ந்த கார்மேகம், அவரது பெற்றோர் மற்றும்
அவரது உறவினர்கள் 12பேர் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். இதனைத்
தொடர்ந்து கார்மேகம் தனது வாக்குமூலத்தில், சுஜாதாவைக் கடத்தி
வன்புணர்ச்சி செய்து, நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள சுடுகாட்டில் வைத்து
பெட்ரோலை ஊற்றி பிணத்தை எரித்து விட்டேன் என்றும் கூறியதாக காவல்
துறையினர் கூறினார்கள். வழக்கும் நடந்து வந்தது. இந்நிலையில் சுமார் 9
ஆண்டுகள் கழித்து, காணாமல் போய், எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட
அதே சுஜாதா, திருமணம் முடிந்து, கணவர் மற்றும் குழந்தையுடன் அவரது ஊருக்கு
வந்து சேர்ந்தார். இதன்படி பார்த்தால் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட
சாம்பல் யாருடையது? செய்யாத குற்றத்திற்க்கு, கார்மேகம் உள்ளிட்டோர்
அனுபவித்த தண்டனைக்கு யார் பொறுப்பு?
அனைத்து வழக்குகளுமே இதே
தன்மையுடன்தான் இருக்கும் என்று கூறாவிட்டாலும், மேற்கண்ட இரு வழக்குகளுமே
ஒருவேளை தீர்ப்பிடப்பட்டிருக்கும் பட்சத்தில் அதற்காக வழங்கப்பட வேண்டிய
தண்டனையாக, மரண தண்டனை என இந்திய தண்டனைச் சட்டத்தில்
வரையறுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீதிமன்றத்தின் மூலமாகவும், அரசாங்கத்தின்
மூலாமாகவும் மேற்கண்ட வேலுச்சாமி மற்றும் கார்மேகம் ஆகியோரது உயிர்
சட்டத்தைக்காட்டி பறிக்கப்பட்டிருக்குமானால், அந்த விலைமதிப்பற்ற
உயிர்களைத் திருப்பித்தர எவரால் கூடும்.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு,
இதுநாள் வரையிலும் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்டு 55 பேருக்கு மரண தண்டனை
வழங்கப்பட்டுள்ளது. தற்போது 309 பேர் மரண தண்டனை அறிவிக்கப்பட்டு, தண்டனை
நிறைவேற்றுதலுக்கான காத்திருப்பில் சிறையில் தங்களது வாழ்வைக் கழித்து
வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மரண தண்டனை அமலிலுள்ள இதே கால கட்டத்தில்
தான் குற்றமிழைத்துள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பல்லுக்குப் பல்,
கண்ணுக்குக் கண் என்ற குரூர தண்டனைகள் அமலிலுள்ள நாடுகளிலும் கூட
இன்றளவிலும் குற்றங்கள் நீடித்தவண்ணமேயுள்ளன. இதன் மூலமாக மரண தண்டனை
போன்ற தண்டனைகள் அமலில் இருந்தால்தான் குற்றங்கள் குறையும்,
கட்டுப்படுத்தப்படும் எனும் வாதம் செயலிழந்து போகிறது.
விலங்குகளில் எந்த வகையினமும் அவைகள்
தோன்றிய காலந்தொட்டு இதுநாள் வரையிலும் செய்யவே செய்யாத ஒரு காரியம்
திட்டமிட்டு தன் சக உயிரினத்தைப் பறிப்பது. அதிலிருந்து முரண்பட்டு, தன்
சக மனிதனின் உயிரைப் பறிப்பதற்கு ஆட்சியாளர்களால் இவ்விதமாய் முன்
கூட்டியே நாள் குறிக்கப்பட்டுள்ளது. மாக்கள் செய்யாததை மக்களில் சிலர்
கூடிச் செய்யும் இந்த செயல்முறைதான் நாகரிக சமூகத்தின் அடையாளமோ!
கருணைக்கொலை, கருக்கொலை மற்றும்
சிசுக்கொலை என்ற பெயரில் எவரது உயிரும் பறிக்கப்பட்டு விடக்கூடாது, அவைகள்
தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக, அவைகள் ஒவ்வொன்றும்
தண்டனைக்குரிய தனிக் குற்றங்களாக நமது சட்டங்களில் வகைபடுத்தப்பட்டுள்ளன.
இதற்கான அடிப்படை நோக்கம், இயற்கையாக உருவான மனித உயிரானது இயற்கையாகவே
அதன் முடிவை அடையவேண்டும் என்பதாகவே இருக்க முடியும். இதே அடிப்படை
தத்துவம் மரண தண்டனை என்ற பெயரில் சட்டப்படியாக எந்தவொரு உயிரையும்
பறிக்கும் நிகழ்வுக்கும் பொருந்தும்.
மரண தண்டனையானது ஒரு குரூரமான தண்டனைமுறை
என்பதோடு மட்டுமின்றி, எந்த ரூபத்திலும் திரும்பப் பெறவேமுடியாத ஒரு
தண்டனையாகும். தண்டனையின் நோக்கம், சீர்படுத்துவதேயன்றி வேறெதுவுமாகவும்
இருக்க முடியாது. சட்டமானது ஒருவருக்கு வாழ்வு உத்தரவாதப்படுத்தப்பட
வேண்டுமேயன்றி, மாறாக எந்த சூழலிலும் ஒருவரது உயிரை பறித்தலுக்குத்
துணையாக இருக்க முடியாது. எனவே, மனித உரிமைகளுக்கு முரணான, மரண
தண்டனையானது முற்றிலுமாக ஒழிக்கப்படுதலின் மூலமாகவே நமது எண்ணங்களும்,
சிந்தனைகளும் மேம்பட்டுள்ளன என்பதை சான்றாக காட்ட முடியும்.
No comments:
Post a Comment