வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க

Sunday, 1 December 2013

இந்தியாவில் என்.ஆர்.ஐ.க்கள் சொத்து வாங்க முடியுமா?

 
NRI's can buy property in Indiaவெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் மனை, வீடு வாங்க முடியுமா? ஏன் முடியாது. நிச்சயம் வாங்க முடியும். இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய அதிகமாகவே அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காகவே ரிசர்வ் வங்கி மற்றும் எஃப்இஎம்எ (FEMA) நிறைய விதிமுறைகளை வகுத்துள்ளன. மேலும் இதில் கீழ்காணும் விதிமுறைகள் உள்ளன:
* விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் மற்றும் விவசாயம் சார்ந்த சொத்துக்களைத் தவிர, மற்ற அசையாச் சொத்துகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்கலாம்.
* இந்தியாவில் வாழ்ந்து வரும் இந்தியக் குடிமகனிடமிருந்தோ வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இந்தியக் குடிமகனிடமிருந்தோ வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்தோ, ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் இங்குள்ள அசையாச் சொத்துக்களை அன்பளிப்பாகப் பெறலாம்.
* வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களது பரம்பரைச் சொத்துக்களை இங்கு பெறஅனுமதி உண்டு.
* வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் அசையாச் சொத்துக்களை, இந்தியாவில் வசிப்பவர்களுக்கு விற்பனை செய்யலாம்.
* வெளிநாடு வாழ் இந்தியர்கள், இங்குள்ள தங்களது விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் மற்றும் விவசாயம் சார்ந்த நிலங்கள் போன்றவற்றை, இந்தியாவில் வாழ்பவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க அனுமதி உண்டு.
* வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் இருக்கும் தங்களது வீடுகள் அல்லது வியாபார சொத்து போன்றவற்றை இந்தியாவில் வாழ்பவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளில் வாழும் இந்தியக் குடிமக்களுக்கோ அல்லது வெளிநாடுகளில் வாழந்து வரும் இந்திய வம்சாவளியினருக்கோ அன்பளிப்பாக வழங்க அனுமதி உண்டு.
ஒன்றுக்கொன்று ஆதரவு
இந்தியாவில் சொத்துக்களை வாங்க, இந்திய நிதி நிறுவனங்கள் தங்களுக்கு மிக எளிதாக கடன் தருவதாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் இந்திய நிதி நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களை தங்களின் முக்கியமான வாடிக்கையாளர்களாக கருதுகின்றன. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்திய நிதி நிறுவனங்கள் மிக எளிதாக, விரைவாக வீட்டுக் கடனை வழங்குகின்றன. ஏனெனில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வீட்டுக் கடனை சரியான நேரத்தில் செலுத்துகின்றனர் என்பதே இதற்கு காரணம்.
தற்போது இந்தியாவில் சொத்துக்களை வாங்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வீட்டுக் கடன் பெறுவதற்கு ஏதுவாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது.
அதாவது ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் இந்தியாவில் வீடு வாங்க, வீட்டுக் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால், நிதி நிறுவனங்கள் 80 சதவீதக் கடன் தொகையை மட்டுமே வழங்க வேண்டும். மீதித் தொகையை வெளிநாடு வாழ் இந்தியர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.
கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த, ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் தான் வசிக்கும் இடத்திலிருந்தே வங்கிகளின் மூலமாக அதாவது என்ஆர்ஒ அல்லது என்ஆர்இ வங்கிக் கணக்குகள் மூலமாகச் செலுத்தலாம்.
மேற்சொன்ன வங்கிக் கணக்குகள் மூலம் மட்டுமே வெளிநாடு வாழ் இந்தியர் தனது கடன் தொகையையும் அதற்கான வட்டித் தொகையையும் செலுத்த வேண்டும்.
வரி செலுத்துவது அவசியம்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வாங்கும் சொத்துக்களைப் பதிவு செய்யும்போது அதற்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் வரிகளைச் செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் அவர்கள் இந்தியர்களாக இருப்பதால், அதற்கான சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனினும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் சொத்துக்களை குத்தகைக்கு விட்டால் அதற்கான வரிவிதிப்புகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதாவது குத்தகைப் பணம் சொத்திலிருந்து வரும் வருமானத்திற்கு வரியைச் செலுத்த வேண்டும்.
மேலும் அவ்வாறு அவர்கள் தங்களது சொத்துகள் மூலம் வருமானம் பெறும் போது, அவர்கள் வாழ்கின்ற நாடுகள் இந்தியாவோடு டபுள் டாக்ஸ் அவாய்டன்ஸ் ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால், அவர்கள் வசிக்கும் நாடுகளிலும் வரி செலுத்த வேண்டும்.
ஆனால் வீட்டுக் கடனுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் செலுத்தும் வட்டித் தொகைக்கு அவர்கள் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.
அதுபோல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள சொத்துக்களை விற்கும்போது, வருமானவரி சட்டத்தின் கீழ் அவர்கள் கேபிட்டல் கெயின் வரியைச் செலுத்த வேண்டும்.
இப்படி வெளி நாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் சொத்து வாங்க முடியும்.
வெளி நாடுவாழ் இந்தியர்களை ரியல் எஸ்டேட் துறையில் அனுமதிப்பதன் மூலம் இத்துறை மேலும் வளரும் என்று இத்தொழில் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment