வாய்ப்புண் பற்றிய தகவல்களும், வீட்டு வைத்தியமும்:-
வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.
யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.
வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?
பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.
ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம். உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுகின்றது
காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.
பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.
இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.
உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.
பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.
மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.
வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?
வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.
தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.
வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.
தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.
மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.
மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.
No comments:
Post a Comment